சேஃப்என்ட்ரி, டிரேஸ்டுகெதர் போன்ற தடமறியும் மின்னிலக்கச் சாதனங்களை உருவாக்குவதற்கும் வாங்குவதற்கும் செப்டம்பர் மாதம் வரை அரசாங்கம் மொத்தம் $13.8 மில்லியன் பணத்தைச் செலவு செய்துள்ளது.
அவற்றில் $2.4 மில்லியன் 'டிரேஸ்டுகெதர்' உருவாக்குவதற்கும், $5.2 மி. சேஃப்என்ட்ரி உருவாக்குவதற்கும், $6.2 மில்லியன் அதன் தயாரிப்பு மற்றும் அதற்கான கொள்முதலுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.
டிரேஸ்டுகெதர் என்பது அணி யக்கூடிய ஒரு கருவி. இது டிரேஸ்டுகெதர் கைபேசி செயலிக்கு ஒப்பானது. இது கைபேசியில் உள்ளதைப்போல அதன் புளூடூத் தொழில்நுட்பத்தால் அருகிலுள்ள டிரேஸ்டுகெதர் சாதனத்துடன் அல்லது டிரேஸ்டுகெதர் இயக்கத்தில் கைபேசியின் புளூடூத் சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும்.
இதுவரையிலும் இந்த டிரேஸ்டுகெதர் கருவியால் கொவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 25,000 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 160 பேருக்கு தொற்றுப் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இயோ சூ காங் தொகுதி உறுப்பினர் திரு யிப் ஹோன் வென், செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஹி டிங் ரூ ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் எழுத்து மூலம் பதிலளித்தார்.
டிரேஸ்டுகெதர் கருவியின் உதவியால் தொற்று பாதித்தவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்த முடிந்தது என்று அமைச்சர் கான் கூறினார்.
சிங்கப்பூர் மக்களில் யாருக்கு டிரேஸ்டுகெதர் தேவைப்படுகிறது என்பது போன்ற சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதற்கு செலவிடப்பட்டது. மேலும், இப்போது பயன்பாட்டில் உள்ள இந்தக் கருவிகளை மேம்படுத்து வதற்கு அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்யும்.
சேஃப்என்ட்ரி வசதியை மேம்படுத்தும் வழிகளை ஆராய்ந்து வருவதோடு தேவைக்கேற்ப மேலும் அதிக டிரேஸ்டுகெதர் கருவிகளை வாங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கான் தெரிவித்தார்.
சேஃப்என்டிரி வசதியை டிரேஸ்டுகெதர் கருவியுடன் ஒருங்கிணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு வசதிகளின் ஒருங்கிணைப்பை எவ்வாறு மேலும் அதிக பயனுள்ளதாக ஆக்க முடியும் என்பது குறித்த ஆய்வும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிகமானோர் டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவியைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதை அடுத்து அதன் திறன் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கான் கூறினார்.

