மின்னிலக்கப் பொருளியலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு நாட்டின் மின்னிலக்கப் பொருளியல் வலிமையுடன் இருக்க இது வகை செய்யும் என்றார் அவர்.
இதற்கான மூவகை உத்தியை அவர் நேற்று மேற்கோள் காட்டி கைபேசி கட்டமைப்புத் துறையின் மெய்நிகர் நிகழ்வில் பேசினார். மின்னிலக்க உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது, தடையின்றி தரவுகளைப் பெற அனைத்துலக நிர்வாகக் கட்டமைப்பை அமைப்பது, மக்கள் மற்றும் நிறுவனங்களின் மின்னிலக்கத் திறனை மேம்படுத்துவது ஆகியவை மூலம் வலுவான அடித்தளத்தை அமைப்பது ஓர் உத்தியாகும்.
"மின்னிலக்கத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அதில் ஏற்படும் மாற்றங்களை நாம் மிகுந்த ஆர்வத்துடன், உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும். இதற்கேற்ப, நாடு தழுவிய பாதுகாப்பான, மீள்திறன்மிக்க 5ஜி தொடர்புக் கட்டமைப்பில் சிங்கப்பூர் முதலீடு செய்கிறது," என்றார் திரு ஈஸ்வரன். 5ஜி புத்தாக்கத்தைத் தொடங்க $40 மில்லியன் வழங்குவதாக அரசாங்கம் கடந்த ஆண்டு உறுதி அளித்தது.
இவ்வாண்டு இறுதிக்குள் 5ஜி நிபுணத்துவம் தொடர்பாக 1,000 வேலைகள் உருவாக்கப்படும்.
கடந்த செப்டம்பர் மாதம் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் கைபேசி கட்டமைப்பு நிறுவனங்களும் இணைந்து அறிவித்த திட்டம் வாயிலாக இந்த வேலைகள் உருவாக்கப்படும்.
5ஜி கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றிலும் சிங்கப்பூர் அதன் ஆற்றலை மேம்படுத்தி வருவதாக அமைச்சர் ஈஸ்வரன் விவரித்தார்.
"செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகிய வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடியவை. அவற்றால் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் வளர்ச்சிக்கான புதிய பாதைகளை அமைக்கவும் முடியும்," என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
"அதுமட்டுமல்லாது, அனைத்துலக வர்த்தகம் தொடர்ந்து செழிப்புடன் இருக்கவும் உலகளாவிய நிலையில் மக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தரவுகள் தடையின்றிக் கிடைப்பதை சிங்கப்பூர் உறுதி செய்ய வேண்டும்," என்றார் அவர். உதாரணத்துக்கு, மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தங்களின் முன்னோடியாக சிங்கப்பூர் திகழ்கிறது. இதுவரை நியூ
சிலாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தங்களில் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்கொரியாவுடனும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
"மின்னிலக்க உலகை நோக்கி நாம் செல்லும் அதே வேளையில் மின்னிலக்கத் திறன் கொண்டவர்களுக்கும் அதுகுறித்து அவ்வளவாக தெரியாதவர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். நமது பொருளியலும் சமுதாயமும் மின்னிலக்க உருமாற்றத்தை எதிர் கொள்ளும் வேளையில் யாரையும் நாம் ஆதரவின்றி விட்டுவிடக்
கூடாது. அனைவரையும் உள்ள டக்கிய சமூதாயத்தை உறுதி செய்ய வேண்டும்," என்றார் திரு ஈஸ்வரன்.

