மனநிலை சரியில்லாத 46 வயது ஆடவர் ஒருவரைக் குறிப்பிட்ட கால வரம்பு இன்றி தடுத்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த ஆடவர் தன்னுடைய 75 வயது தந்தையைக் கொலை செய்துவிட்டதாக உயர் நீதிமன்ற விசாரணை ஒன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது.
டான் கோக் மெங் என்ற அந்த ஆடவர், 2015 நவம்பர் 13 ஆம் தேதி, பிடோக் நார்த்தில் இருக்கும் தங்கள் அடுக்குமாடி வீட்டில் தன் தந்தையுடன் மூன்று மணி நேரம் தனித்து விடப்பட்டார்.
அப்போது அவர் தன் தந்தையைக் கொன்றுவிட்டார்.
டான் அந்தக் குற்றச்செயலை செய்து இருக்கிறார் என்றாலும் மனநிலை கோளாறு காரணமாக கொலைக் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
டான், மனநல நிலையங்களில், சிறையில் அல்லது பாதுகாப்பு உள்ள இதர இடங்களில் தனிமையில் வைக்கப்படுவார்.
இதற்குக் குறிப்பிட்ட கால வரம்பு எதுவும் இல்லை. காலக்கிரம முறைப்படி அவரின் மனநிலை சோதிக்கப்படும். விடுதலை செய்ய பொருத்தமானவர் என்று தெரியவரும்போது சட்டம் அவரை விடுவிக்கும். கொலைச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து மருத்துவர்களும் போலிசாரும் டானின் வீட்டுக்குச் சென்றனர். ஒன்றுக்குமே உதவாத மகன் என்று தன் தந்தை தன்னைத் திட்டியதாகவும்
அதனால் தனக்கும் தன் தந்தைக்கும் இடையில் உறவு சரியில்லை என்றும் டான் அதிகாரிகளிடம் கூறினார்.

