கொவிட்-19 காரணமாக சவால்மிக்க காலகட்டத்தை விமானப் போக்குதவரத்து எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே, வருமானம் ஈட்டும் வழிகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இறங்கியுள்ளது. உலகத் தரம்வாய்ந்த சேவையை வழங்கும் விமானச் சேவை எனத் தனக்கு இருக்கும் நற்பெயரைப் பயன்படுத்தி அது செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர் சேவை, நெருக்கடிநிலை நிர்வாகம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்களுக்குப் பயிற்சித் திட்டங்களை வழங்க இருப்பதாக எஸ்ஐஏ நேற்று அறிவித்தது. பயிற்சி அளிப்பதற்காக புதிய பிரிவு ஒன்றை அது தொடங்கியுள்ளது. அதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயிலகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கூ டெக் புவாட் மருத்துவமனையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 25 நோயாளிப் பராமரிப்பு அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை எஸ்ஐஏ நடத்தியது.
சில்லறை வர்த்தகம், உணவு மற்றும் பானம், கட்டுமானம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க எஸ்ஐஏ இலக்கு கொண்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடி நிலையின் காரணமாக தனது வழக்கமான விமானச் சேவை
களுடன் மற்ற சேவைகளையும் வழங்க எஸ்ஐஏ முடிவெடுத்துள்ளதாக கடந்த 21 ஆண்டுகளாக விமானியாகப் பணியாற்றி வரும் கெப்டன் செந்தில்வளவன் தெரிவித்தார். கொவிட்-19 நெருக்கடி நிலைக்கு முன்பு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 200 விமானிகளுக்கு அவர் பயிற்சி அளித்து வந்தார். தற்போது விமானியின் பங்களிப்பு மாறியிருப்பதாக அவர் தெரிவித்தார். விமானத்தை செலுத்துவது மட்டுமல்லாது நிர்வாகம், எதிர்பாராச் சூழ்நிலைகளை சமாளிப்பது போன்றவை விமானிகளின் பணியாகிவிட்டதாக அவர் கூறினார்.

