ரத்தத்தில் உள்ள உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) அளவைக் கண்காணிக்கும் தானியங்கி கம்பியில்லா செயல்முறையின் முன்னோட்டத் திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் சிங்கப்பூரின் புதிய ஆயுதமாக இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் குறைந்த அளவு உயிர்வளி இருப்பது, கொவிட்-19 அறிகுறியாக இருக்கலாம்.'புளூடூத்' அம்சமுள்ள நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர்களை இப்புதிய செயல்முறை பயன்படுத்தி ரத்தத்தின் உயிர்வளி அளவுகளைக் கண்டறியும்.
கையால் செய்வனவற்றை இச்செயல்முறை தானியக்க முறையாக மாற்ற உதவுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் அளவீடுகளை ஒருங்கிணைத்துக் காண்பிக்கிறது.
தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் தங்களின் ஆக்சிமீட்டர் அளவீடுகளைத் தினமும் இரண்டு முறை பதிவு செய்ய வேண்டும். புதிய தொற்றுச் சம்பவங்களை அடையாளங்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. தற்போது இச்செயல்முறை தானியக்க முறையில் செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய செயல்முறை மூலம், ஊழியர்கள் தங்களின் ஆள்காட்டி விரலில் 'புளூடூத்' கொண்ட நாடித்துடிப்பு ஆக்சிமீட்டரைப் பொருத்தி, 30 வினாடிகளில் ரத்தத்தின் உயிர்வளி அளவைப் பதிவு செய்துவிடலாம்.
இவ்வாறு பெறப்படும் அளவீடுகள், பின்னர் நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப்படும். ரத்தத்திலுள்ள உயிர்வளி, இதயத் துடிப்பு ஆகியவற்றின் அளவீடுகள் வழக்கநிலையில் இருந்தால் பச்சை நிறம் காட்டும். ஏதோ ஓர் அளவீடு வழக்கநிலையில் இல்லையெனில், ஆரஞ்சு நிறம் காட்டப்படும். இரண்டு அளவீடுகளும் வழக்கத்திற்கு மாறாக இருந்தால் சிவப்பு நிறம் காட்டும்.
மேலும், அளவீடுகள் குறித்த தகவல்கள் அவரவர் கைபேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பப்படும். இத்தகவல்களை ஆங்கிலம், தமிழ், சீனம், வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் பெற்றுக்கொள்ள தேர்வுசெய்யும் அம்சமும் உள்ளது.
இப்புதிய செயல்முறையை சமூக பராமரிப்பு வளாகங்களிலும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு மாத முன்னோட்டத் திட்டத்தில் 24 வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில், ஊழியர்களை வெற்றிகரமாகக் கண்காணிக்கலாம் என்று தெரிய வந்தது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு, இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை இப்புதிய செயல்முறையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டது. இத்திட்டத்திற்கு தெமாசெக் அறநிறுவனமும் தேசிய ஆய்வு அறநிறுவனமும் ஆதரவளித்தன.

