சிங்கப்பூரில் நிதி தொழில்நுட்பத் துறை வளர்ச்சி காணும் என்றும் கூடுதல் வேலை வாய்ப்புகள் அதனால் ஏற்படும் என்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறியுள்ளார்.
கொவிட்-19 சூழலிலும் சாத்தியமாகக்கூடிய பல்வேறு புதிய வாய்ப்புகள் இத்துறையில் உள்ளதாக அவர் இணையம் வழி நேற்று நடைபெற்ற 'மின்னிலக்க வங்கிப் பரிவர்த்தனைக் கருத்தரங்கில்' தெரிவித்தார்.
"கொவிட்-19 சூழலின் முரண் என்னவென்றால், சிறிய நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விடப்பட்டன.
"மின்னிலக்கமயமாவதால் வரும் வாய்ப்புகளை அறிந்து புதிய சந்தைகளுக்குள் நிறுவனங்கள் கால்வைக்க வைத்துவிட்டது. சாதாரண சில்லறை வர்த்தகக் கடைகள்கூட இணையம் வழி தங்களின் பொருட்களை விற்கத் தொடங்கிவிட்டன," என்றார் அவர்.
நிதித் துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் வியாபாரத்தையும் ஊழியரணியையும் விரிவுபடுத்தி வருவதாக சிங்கப்பூர் நிதி தொழில்நுட்ப சங்கத்தின் முன்னோட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன என்று திரு இங் சுட்டினார்.
"சிங்கப்பூரின் நிதிச் சேவைத் துறைக்கும் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு புதிய சகாப்தமே தொடங்கியுள்ளது. சவால்களும் வாய்ப்புகளும் கூடி வரும் உற்சாகக் காலகட்டம்," என்றார் அவர்.
நாளடைவில் நேரடியாகச் செல்லக்கூடிய வங்கிகள் குறைந்து, கூடுதல் மின்னிலக்க வங்கிகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது வேலைகள், ஊழியர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொன்னார்.
அதனால், நிதித்துறை நிபுணர்கள் தங்களின் திறனை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மின்னிலக்கத் திறன்கள், தரவுப் பகுப்பாய்வு அம்சங்களில் நிபுணத்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தங்களின் ஊழியரணியில் முதலீடு செய்யவும் முதலாளிகளுக்கு அறிவுறுத்தினார்.
முடிந்தால், வேலைகளை மாற்றியமைத்து தேவை ஏற்படின் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
"மேம்பட்ட திறன்கள் தேவைப்படும் பொறுப்புகளை ஏற்கும் தகுதி ஊழியர்களிடம் இருந்தால், அனைவருக்கும் பலன் அளிக்கும் ஒரு சூழ்நிலையாக இது அமையும். ஊதியம் அதிகரிக்கும், சமூகநலனும் அதிகரிக்கும்," என்று குறிப்பிட்டார் திரு இங்.

