முன்னாள் பணிப்பெண் பார்தி லியானி விவகாரத்தில் எந்தவோர் இடத்திலும் முறையற்ற ஆதிக்கம் எதுவும் இல்லை என்பது தெரியவந்து உள்ளது.
தலைமைச் சட்ட அதிகாரியான லூசியன் வோங் 2006ல் கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் நிர்வாகச் சபையில் இருந்து விலகிக்கொண்டார். அப்போது அந்த நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தவர் லியூ மன் லியோங்.
இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்ததன் காரணமாகவே தலைமைச் சட்ட அதிகாரி அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாகச் சபையில் இருந்து விலகிக்கொண்டார்.
இதைக் கருத்தில் கொண்டே, அண்மையில் பார்தி லியோனி என்ற பணிப்பெண்ணும் திரு லியூவும் சம்பந்தப்பட்ட வழக்கு பற்றி தலைமைச் சட்ட அலுவலகம் நடத் திய மறுபரிசீலனையில் இருந்து திரு வோங் விலகி இருந்தார்.
இதை சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சர் நிலை அறிக்கையில் வெளியிட்டார்.
இந்த வழக்கில் எந்தவொரு கட்டத்திலும் முறையற்ற ஆதிக்கம் எதுவும் இல்லை என்பதை போலிசும் தலைமைச் சட்ட அலுவலகமும் மேற்கொண்ட மறுபரிசீலனைகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன என்று அமைச்சர் சண்முகம் மன்றத்தில் வலியுறுத்திக் கூறினார்.

