சிங்கப்பூர் நாணய ஆணையம் நிதித்துறை சார்ந்த சிக்கலான முறைகேடுகளைக் கண்டறிந்து துடைத்தொழிக்க அதன் அமலாக்கப் பிரிவை நவீன தொழில்நுட்ப உதவியுடன் வலுப்படுத்தும் பணி தொடரும் என்று கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் வரை 18 மாதங்களில் சிங்கப்பூர் நாணய ஆணையம் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் குற்றவியல் சார்ந்த ஒன்பது குற்றங்களைக் கண்டுபிடித்து அதற்காக $11.7 மில்லியன் தண்டத்தொகையும் வசூல் செய்துள்ளது. பணமோசடி தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியதற்காக தண்டத்தொகையுடன் சேர்த்து ஆணையம், $3.3 மில்லியன் அபராதம் வசூலித்தது.
தகுதியற்ற அல்லது அங்கீகாரம் பெறாத நிதி கையாளுநர்கள் 25 பேருக்குத் தடை விதித்ததாக ஆணையம் நேற்று வெளியிட்ட தனது அமலாக்க அறிக்கையில் தெரிவித்தது.
இதுபோன்ற குற்றங்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கும் ஆய்வுக்கும் வழக்கமாக 33 மாதங்கள் ஆகும். பின்னர் அது 24 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
அதுபோல தண்டத்தொகை வழக்குகள் குறித்த விசாரணைக்கும் 30 மாதங்கள் வேண்டியிருந்தது. அதுவும் 26 மாதங்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மைய வழக்குகளை ஆணையம் 18 மாதங்களில் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்துவரும் சிங்கப்பூர் நிதித்துறையின் நம்பகத்தன்மையையும் அதன் நற்பெயரையும் தொடர்ந்து கட்டிக்காப்பதற்கு ஆணையம் அதன் அமலாக்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் குமாரி பெக்கி பாவ் கூறினார்.
நிதித்துறை சார்ந்த முறைகேடுகளைத் தடுத்துநிறுத்தி பயனீட்டாளரைப் பாதுகாப்பதோடு முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கைஅளிக்க வேண்டும். அதற்கு கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் குமாரி பெக்கி கூறினார்.
தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாகவே குற்றங்களை வெற்றிகரமாக அடையாளம் காண முடிந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வர்த்தகக் குற்ற விசாரணைப்பிரிவு, கணக்கு வைப்பு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையம், லஞ்ச ஊழல் ஒழிப்பு புலனாய்வுத்துறை ஆகிய அரசாங்க அமைப்புகளுடனும் இணைந்து ஆணையம் செயல்பட்டது.
"எங்களுடன் இணைந்து செயல்பட்ட இந்த அமைப்புகள் பல சிக்கலான வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வுசெய்யும் பணிகளில் உதவின," என்றார் குமாரி பெக்கி.
நிதித்துறை சார்ந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் வெளிநாட்டு அரசாங்கங்களின் நிதித்துறை ஆணையங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நிதித்துறையில் தந்திரமாகக் கையாளப்படும் சிக்கலான முறைகேடுகளையும் குற்றங்களையும் ஒழிக்க நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆணையம் அதன் அமலாக்கப் பிரிவின் செயல்திறனை செம்மைப்படுத்தும் பணிகள் தொடரும் என்றும் குமாரி பெக்கி கூறினார்.

