வலைப்பதிவாளரான 20 வயது ஏமஸ் யீ, 'சிறுவர் பாலியல்' தொடர்பான படங்களை வைத்திருந்ததாக அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 4) குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூரரான ஏமஸ் யீ இம்மாதம் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார். அவர் மீதான வழக்குகள் அப்போது அவருக்கு விவரிக்கப்படும்.
இல்லினாய்ஸ் நீதிமன்றம் ஏற்பாடு செய்த தற்காப்பு வழக்கறிஞர் யீயின் சார்பில் வாதாடினார்.
சிங்கப்பூரில் சமய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக 2015, 2016ஆம் ஆண்டுகளில் இரு முறை சிறைக்குச் சென்றவர் யீ. அவருக்கு அமெரிக்கா அடைக்கலம் வழங்கியதையடுத்து, 2017 முதல் சிகாகோவில் வசித்து வருகிறார் யீ.
சிகாகோவில் இருக்கும்போது நிர்வாண புகைப்படங்களையும் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளையும் 14 வயது டெக்சஸ் சிறுமியுடன் பகிர்ந்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், யீக்கு வழங்கப்பட்ட அடைக்கலம் மீட்டுக்கொள்ளப்படுவதுடன் அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்.
தேசிய சேவைக்கு பதிவு செய்வதன் தொடர்பிலான மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டிய தினத்துக்கு முந்தைய நாள் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற யீ, பின்னர் அங்கு அரசியல் அடைக்கலம் கோரினார்.