அமெரிக்காவில் வாக்குப் பதிவு முடிந்து நேற்றுக் காலை வரை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனால் அடுத்த அதிபர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் அதிபராக யார் வந்தாலும் தேர்தலால் பிளவுபட்டுள்ள நாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுங் சிங் கேட்டுக்கொண்டார்.
உலகமயமாக்குதல், மின்னிலக்க மயம் ஆகியவற்றுக்கு எதிரான சவால்களை சமாளிக்க நாட்டின் ஒற்றுமை அவசியம்.
இல்லையென்றால் பொருளியலில் பின்னடைவு ஏற்பட்டு ஒட்டுமொத்த உலகப் பொருளியலுக்கு பாதிப்பு ஏற்படும்.
இத்தகைய மாற்றம் ஏற்படாவிட்டால் உலகமயமாக்குதலில் சரிவு ஏற்பட்டு உலகப் பொருளியலின் அமைப்பும் முறிந்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.
"ஒத்த கருத்துடைய நாடுகளை ஒன்று சேர்த்து உலகில் தனது தலைமையை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதே அமெரிக்கா முன்னேறிச் செல்வதற்கான முக்கிய சவால்களில் ஒன்று.
"இதன் மூலமே உலகப் பொருளியலை நிலவரத்துக்கு ஏற்ப வைத்திருக்க முடியும்," என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் நெருங்கி வந்த சமயத்தில் அமைச்சர் சான் தனது கருத்தை வெளியிட்டார்.
தற்போதைய அதிபரான டோனல்ட் டிரம்ப், முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல் பல மாநிலங்களில் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்கா ஏறக்குறைய இரண்டாகப் பிளவுபட்டுள்ளதை தேர்தல் சபை வாக்கு கள் காட்டுவதாக புளூம்பர்க்குக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
அமெரிக்க தேர்தல் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கொவிட்-19 மீண்டும் தலை தூக்குவதால் சிங்கப்பூர் பாதிக்கப்படுகிறது.
வர்த்தகத்தைச் சார்ந்துள்ள சிங்கப்பூரும் அடுத்தடுத்த முடக்கத் தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட மதிப்பீட்டை சுட்டிக்காட்டிய அவர், சிங்கப்பூரின் பொருளியல் படிப்படியாக ஏற்ற இறக்கமாக மீட்சியடையும் என்றார்.
சீனா, கிருமித்தொற்றில் இருந்து மீண்டு வருவது உலகப்பொருளியலுக்கு ஆறுதலாக இருந்தாலும் சீனா மட்டுமே உலகப் பொருளியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

