மரினா பே வட்டாரத்தில் இவ்வாண்டு புத்தாண்டை வரவேற்கும் வாண வேடிக்கை இருக்காது.
கொவிட்-19 பரவல் காரணமாக பெருமளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக நகர மறுசீரமைப்பு ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்குப் பதிலாக தீவு முழுவதும் உள்ள குடியிருப்புப் பேட்டைகளில் வாணவேடிக்கைகள் நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்தது.
"பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமையளிக்க விரும்புகிறோம். அதே சமயத்தில் புத்தாண்டை மக்கள் பாதுகாப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டாட மாறுபட்ட வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்," என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி லிம் எங் ஹுவி சொன்னார்.
மரினா பேயில் வாணவேடிக்கைகளுக்குப் பதிலாக இரண்டு ஒளிக்கற்றைக் காட்சிகள் இடம்பெறுகின்றன.
முதல் காட்சி, பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களின் கலைப்படைப்புகள் அலங்கரிக்கும்.
தேசிய தொண்டூழியர், கொடை யாளர் நிலையத்துடன் கூட்டு சேர்ந்து இந்தக் காட்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான சிங்கப்பூர் ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், கலை அறிவியல் அருங்காட்சியகம், மெர்லயன் ஆகியவை டிசம்பர் 25 முதல் 31 வரை ஒளியூட்டப்படும்.
இரண்டாவது காட்சி, மரினா பே ஆகாயவெளியை ஒளியூட்டும் வகையில் 60 ஒளிக்கற்றைகள் பாய்ச்சப்படும்.
இதனை டிசம்பர் மாதம் முழுவதும் காண முடியும். இந்த இரு காட்சிகளும் கொள்ளை நோயிலிருந்து மீண்டு வருவதையும் புதிய ஆண்டில் ஒரே நாடாக வலுவுடன் மீள்வதையும் பிரதி பலிக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
புத்தாண்டின் முந்தைய நாள் இரவில் மீடியாகார்ப் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதில் உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்கள் பங்கேற்க விருக்கின்றனர்.
மரினா பே வட்டார ஒளியூட்டல் மற்றும் குடியிருப்புப் பேட்டைகளின் வாணவேடிக்கை காட்சிகளை உள்ளடக்கிய இந்த இசை நிகழ்ச்சி ஒளிவழி 5ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

