சிங்கப்பூரில் நீதித்துறை சுதந்திரமாகத் தொடர்ந்து இருந்து வரவேண்டியது முக்கியமானது என்று பேராசிரியர் ஜெயகுமார் தெரிவித்து இருக்கிறார்.
நீதித்துறையுடன் கூடிய தங்கள் தொடர்புகளில் அமைச்சர்களும் அதிகாரிகளும் முறை தவறாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவும் மற்ற பிரதமர்களும் மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளனர் என்றார் அவர்.
பேராசிரியர் ஜெயகுமார் எழுதிய 'ஆளுமை: ஒரு சிங்கப்பூர் கண்ணோட்டம்' என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
வெளியீட்டு நிகழ்ச்சியில் பார்தி லியானி என்ற பணிப்பெண் வழக்கு விவகாரம் தொடர்பிலான கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் இதை தெளிவு படுத்தி இருக்கிறார் என்றார் அவர்.
பணிப்பெண் மீது வழக்குத் தொடுக்க அரசினர் தரப்புக்கு நல்ல முகாந்திரம் இருந்தது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் முரணற்ற ஆதிக்கம் எதுவும் இல்லை என்பதற்குப் போதிய தகவல்களையும் திரு சண்முகம் தெரிவித்து இருந்தார். முறையற்ற ஆதிக்கம் இருந்ததாக தாங்கள் கூறவில்லை என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதிப்படுத்தி இருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஜெயகுமார் எழுதி இருக்கும் 192 பக்க புத்தகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் வெளியிட்டு உள்ளது. அதை $35 விலைக்கு முன்னணி புத்தகக் கடைகளில் வாங்கலாம்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் இணைய புத்தகக் கடையில் இப்போது அந்தப் புத்தகம் கிடைக்கும்.
போஃமா சட்டம் பற்றி கருத்து கூறிய அவர், சிங்கப்பூரர்கள் எப்போதுமே தாமாக விழிப்புநிலையில் இருந்து வரவேண்டும் என்பதுதான் உண்மையான பாதுகாப்பு என்றார்.
பிரதமர் லீ சியன் லூங் குடும்ப சச்சரவு பற்றி கருத்துரைத்த பேராசிரியர், தங்களின் செய்கைகள் பிரதமரின் நற்பெயரை மட்டுமின்றி சிங்கப்பூரின் நற்பெயரையும் பாதித்துவிடும் என்பதை பிரதமரின் உடன்பிறப்புகள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் பிரதமரின் உடன்பிறப்புகள் பிரதமர் மீது குறைகூறியது தமக்கு திகைப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது பற்றி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கருத்து கூறிய பேராசிரியர், வரும் 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்நோக்கக்கூடிய சாத்தியமான அரசியல் சூழல்களைச் சுட்டினார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வலுவான மசெக அரசாங்கம் அமையலாம்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறாத, இருந்தாலும் மன்றத்தில் சாதகமான அளவுக்கு பெரும்பான்மை பெற்றிருக்கின்ற மசெக அரசாங்கம்; ஒரு சில இடங்களை அதிகமாகக் கைப்பற்றி மசெக அல்லது மசெக சாராத அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வருவது;
வலுவான பெரும்பான்மையுடன் கூடிய இடங்களைக் கைப்பற்றி மசெக அல்லாத அரசாங்கம் வலுவாக அரியணை ஏறுவது ஆகியவை அந்தச் சாத்தியமான அரசியல் நிலவரங்கள் என்று அவர் குறிப்பிட்டார். தமது புத்தகத்தில் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்ற இதர விவகாரங்கள் பற்றி யும் பேராசிரியர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

