மோசடிக்காரர்கள் அல்லது சந்தேகத்துக்கு இடமான முறையில் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மாற்றி அனுப்பி இருப்பவர்கள் என்று கூறப்படும் 268 பேரை போலிஸ் விசாரித்து வருகிறது.
அந்தச் சந்தேகப்பேர்வழிகளிடம் அப்பாவிகள் மொத்தம் $3 மில்லியன் தொகையைப் பறிகொடுத்து இருக்கிறார்கள் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
போலிஸ் அதிகாரிகள் 15 முதல் 73 வரை வயதுள்ள 177 ஆடவர்களையும் 91 மாதர்களையும் விசாரித்து வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 542 சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. கடன், இணைய வர்த்தகம், இணைய காதல் மோசடிகள் ஆகியவை இத்தகைய மோசடி முயற்சிகளில் அடங்கும் என்று போலிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு போலிஸ் தரை பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை தீவு முழுவதும் எடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டனர்.
ஏமாற்றியதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் யாராவது குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.
பணமோசடிகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறையும் $500,000 வரை அபராதமும் விதக்கப்படலாம்.
இணையத்தில் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளும்படி பொதுமக்களுக்குப் போலிஸ் ஆலோசனை தெரிவித்துள்ளது.
மோசடிகளைத் தவிர்த்துக்கொள்வதற்கான தகவல்களைப் பெற பொதுமக்கள் 1800-722-6688 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம்.
மோசடி பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் அவர்கள் 1800-255-0000 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

