மக்கள் கழக நற்பணிப் பேரவையும் 'மெஸ்ரா' எனும் மலாய் நற்பணிப் பேரவையும் இணைந்து இம்மாதம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளிப் பலகாரங்களை வழங்குகின்றன.
இதன் மூலம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படும் அதேவேளையில், சமூக ஒற்றுமையும் வலுப்படுகிறது என்று அவ்விரு நற்பணிப் பேரவைகளும் கருதுகின்றன. அந்த வகையில் நேற்று சுவா சூ காங் அவென்யூ 7ல் வசிக்கும் 200 வசதி குறைந்த குடும்பங்களுக்கு அக்குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டோன் வீ, நற்பணிப் பேரவை, மெஸ்ரீ ஆகியவற்றின் 40 தொண்டூழியர்களுடன் இணைந்து 20 தட்டுகள் தீபாவளிப் பலகாரங்களை வழங்கினார். அவர்களில் ஒருவரான 61 வயது திருவாட்டி பவானி வெங்கட்ராமன், "வாடகை வீடுகளில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அக்கம்பக்கத்தாருடனும் அடித்தளத் தலைவர்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவித் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்," என்றார்.
தீபாவளி நாளன்று தமது அண்டை வீட்டாருக்காக சமைத்து அவர்களுடன் உணவையும் தீபாவளிப் பலகாரங்களையும் பகிர்ந்துகொள்ளப்போவதாகவும் கூறிய திருவாட்டி பவானி, இப்படித்தான் தாம் தீபாவளியைக் கொண்டாடி வருவதாகவும் சொன்னார். தீபாவளிப் பலகாரங்களை விநியோகித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு டோன் வீ, "இப்படிப்பட்ட முயற்சிகளின் வழி ஒருவர் மற்றவரின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
"மேலும் விழாக்காலங்களில் வசதி குறைந்தவர்களின் கொண்டாட்ட உணர்வு குறையக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு பண்டிகைப் பலகாரங்கள் வழங்கப்படுவதால், அவர்களது கொண்டாட்ட உணர்வும் அதிகரிக்கிறது.
"அனைவரையும் உள்ளடக்கும் இச்சமுதாயத்தில் அவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் உதிக்கிறது," என்றும் கருத்துரைத்தார்.
திரு டோன் வீயிடமிருந்து தீபாவளிப் பலகாரங்களைப் பெற்றுக்கொண்ட 87 வயது திருவாட்டி சல்பியா யாக்கோப், தீபாவளிப் பலகாரங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, முன்பு காலஞ்சென்ற தமது பஞ்சாபி கணவருடன் சேர்ந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியதை நினைவுகூர்ந்தார்.
தீபாவளிப் பலகாரங்கள் விநியோகத் திட்டத்தில் கிட்டத்தட்ட 2,250 வசதி குறைந்த குடும்பங்களை எட்ட இலக்குக் கொண்டிருப்பதாக நற்பணிப் பேரவையின் தலைவர் திரு கே. ராமமூர்த்தி தெரிவித்தார்.
"குடியிருப்பாளர்களை, குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களை அடைவதே மக்கள் கழகத்தின் முக்கிய இலக்கு. இத்திட்டம் மூலம் விழாக்கால மகிழ்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்த முடிவதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்," என்றும் திரு ராமமூர்த்தி கூறினார்.

