மக்கள் செயல் கட்சியின் புதிய மத்திய செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாவர் என்று இன்று முடிவாகிவிடும். முன்பெல்லாம், ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பொதுவாக 2,000க்கு மேற்பட்ட மசெக ஆர்வலர்கள் சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கம் போல ஒரு பெரிய இடத்தில் கூடி, கட்சியின் மத்திய செயற்குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்து வாக்களிப்பார்கள்.
ஆனால், இப்போது கொவிட்-19 தொடர்பிலான பாதுகாப்பு தூர இடைவெளி காரணமாக, ஆர்வலர்கள் இன்று காலை தங்கள் கட்சிக் கிளைகளில் ஒன்றுகூடி, 36வது மத்திய செயற்குழுவுக்கு வாக்களிப்பார்கள்.
கட்சியின் 93 கிளைகளில் அதன் செயலாளரும் இதர இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பு முகவர்களாக செயல்பட்டு வாக்களிப்பை நடத்துவார்கள்.கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள என்டியுசி சென்டரில் ஒன்றுகூடி தங்கள் வாக்குகளைச் செலுத்துவார்கள்.
ஒவ்வொரு வாக்குச் சீட்டிலும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எழுவரின் பெயர்கள் வண்ணக் குறியிடப்பட்டிருக்கும். அத்துடன் ஆர்வலர்கள் மேலும் ஐவரை சேர்த்து 12 பெயர்களை உள்ளடக்கிய கட்சியின் மத்திய செயற்குழுவைத் தேர்வு செய்வார்கள்.
கட்சியின் முக்கியத் தலைவர் களாக ஈராண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட எழுவர்தான் இந்த முறையும் இடம்பெற்றிருப்பார்கள் என்று அறியப்படுகிறது.
பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஆகியோர் அந்த எழுவர்.
கட்சியின் தலைமைச் செயலாளரான பிரதமர் லீ சியன் லூங் இன்று என்டியுசி சென்டரிலிருந்து உரையாற்றுவார். அவரது உரை கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நான்காம் தலைமுறைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் இம்முறை மத்திய செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுப்படுவார்களா என்பது கவனிக்கக்கூடிய அம்சம் என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் யூஜின் டான்.
ஈராண்டுகளுக்கு முன் அந்த இருவரும் மத்திய செயற்குழுவில் தேர்வு பெறாத உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர். திரு வோங், பொதுத் தேர்தலுக்குப் பிந்திய செய்தியாளர்கள் கூட்டத்தை வழி நடத்தினார். திரு லீ, மசெக தேர்தல் பிரசாரத்தின் மறுஆய்வை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம் குளோபல் கல்விக் கழகத்தின் இணை விரிவுரையாளர் டாக்டர் ஃபிலிக்ஸ் டான், திரு வோங் இவ்வாண்டில், கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவராகச் செயல்பட்டு வருவதைச் சுட்டினார்.
தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங் இம்முறை மத்திய செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்படுவாரா என்பது மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம்.
அமைச்சராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத திரு இங், மத்திய செயற்குழுவில் இருந்தால் அது தவறான பிரதிபலிப்பை அளிக்கலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் நிபுணர் டாக்டர் பில்வீர் சிங் கருதுகிறார்.
ஆனால், டாக்டர் யூஜினோ, மசெகவுக்கும் என்டியுசிக்கும் உள்ள அணுக்க உறவைப் பிரதிபலிக்க அவர் மத்திய செயற்குழுவில் இடம்பெறுவார் என்று கூறுகிறார்.

