நிலத்தடி நீர்க் கசிவுகளைக் கண்டறிய கைகொடுக்கும் அறிவார்ந்த தொழில்நுட்பம்

நிலத்தடி நீர்க் கசிவுகளைக் கண்டறிய கைகொடுக்கும் அறிவார்ந்த தொழில்நுட்பம்

2 mins read
68c15954-8435-476c-bb6e-7b66e9a2a48b
-

நிலத்தடிக் குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளைக் கண்டறிய திறன்பேசி உணரிகள், அறிவார்ந்த பந்துகள் போன்ற கருவிகளை பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் தொழில்நுட்பப் பட்டியலில் சேர்த்துள்ளது.

சிங்கப்பூரின் பிரதான நீர்நிலைகளில் 120 உணரிகளைக் கொண்ட கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. கசிவு உள்ளதா என்பதைக் குழாய்களில் எழும் ஒலியை ஆராய்வதன் மூலம் தெரிய வரும். 2017ஆம் ஆண்டில் உணரிகளின் முன்னோட்டத் திட்டத்தை அமல்படுத்தியதில் இதுவரை 13 நீர்க்கசிவுச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னோட்டத் திட்டம் பலன் அளித்துள்ளதை அடுத்து, அடுத்த ஆண்டு இறுதிக்குள் கழகம் சுமார் 1,200 உணரிகளை நாடளவில் பயன்படுத்த உள்ளது. அதேபோல் 'ஸ்மாட்பால்' என்ற அறிவார்ந்த பந்து வடிவக் கருவியையும் கழகம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குழாய்க்குள் போடப்படும் பந்து, நீரில் மிதந்து செல்லும் அதே வேளையில் குழாயின் விரிசல்களையும் நீண்ட குழாய்ப்பகுதிகளையும் கண்காணிக்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 500 கிலோமீட்டருக்கும் மேலான குழாய்களைக் கண்காணிக்க இவை பயன்படுத்தப்படும் என்று கழகம் குறிப்பிட்டது.

இவற்றுடன் திறன்பேசியையும் குழாயையும் இணைக்கும் ஒருவகை உணரி, குழாயிலிருந்து வரக்கூடிய சத்தத்தை மேலும் தெளிவாகக் கேட்க உதவும்.

திறன்பேசி செயலி மூலம், சுற்றுச்சூழலில் பதிவாகும் வேறு ஒலிகளை அது அகற்றி, கசிவு எங்கு நிகழ்ந்துள்ளது என்பதைத் துல்லியமாகக் காட்டிடும்.

சிங்கப்பூரில் நீர்க் கசிவுச் சம்பவங்கள் அரிது என்ற சிலர் எண்ணினாலும் அண்மைய ஆண்டுகளில் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் குழாய்க்கும் சுமார் ஐந்து கசிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள குழாய்க் கட்டமைப்பு 5,700 கிலோமீட்டருக்கு மேல் விரிவானது என்பதால் ஓராண்டில் 285 கசிவுச் சம்பவங்கள், அதாவது வாரத்திற்கு ஐந்து என்ற கணக்கில் பதிவாகும் சாத்தியம் உண்டு.