ஹெச்ஐவி சிகிச்சைக்கு காத்திருக்கும் காலம் இனி குறையும்

ஹெச்ஐவி சிகிச்சைக்கு காத்திருக்கும் காலம் இனி குறையும்

1 mins read
3be0951e-6d60-40a2-bdc4-a62ad9dd918e
-

எயிட்ஸ் நோய்க்குக் காரணமான மனித நோயெதிர்ப்பு குறைபாட்டு கிருமியால் (ஹெச்ஐவி) பாதிக்கப்பட்டோர், சிகிச்சையைத் தொடங்க இனி எட்டு வாரங்களுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. உயிரைக் காப்பாற்றவல்ல சிகிச்சையைத் தொடங்க நான்கே நாட்கள் போதும் என்று கூறப்பட்டது.

மருத்துவரைச் சந்திக்கும் முதல் நாளன்று தங்கள் சிகிச்சையை ஹெச்ஐவி நோயாளிகள் தொடங்கிவிடலாம். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை (என்யுஹெச்) இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று சிகிச்சை தொடர்பான புதுத் திட்டத்தைத் தொடங்கிய முதல் மருத்துவமனையாகும்.

சிங்கப்பூரில் ஹெச்ஐவி தொற்று நோய், 2030ஆம் ஆண்டுக்குள் இருக்கக்கூடாது என்ற இலக்கைக் கொண்டுள்ள என்யுஹெச், இப்புதிய திட்டம் வழி அதைச் சாதிக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது தனக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக சந்தேகிப்போர், மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

ஆனால் உறுதியான முடிவுகள் வெளிவர இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். இதனால், பரிசோதனையைச் செய்துகொண்டவர் அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

சென்ற வாரம் இத்திட்டத்தின் கீழ் முதல் நோயாளி சிகிச்சையைத் தொடங்கினார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், மருந்தை உட்கொண்டபின் உற்சாகமாக இருப்பதாகவும் கவலை குறைந்துள்ளதாகவும் கூறினார். சிங்கப்பூர்வாசிகளிடையே 2019ஆம் ஆண்டில் 323 புதிய ஹெச்ஐவி தொற்று சம்பவங்கள் பதிவாகியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்த எண்ணிக்கை 8,618ஐ எட்டியுள்ளது. இவர்களில் 2,097 பேர் உயிரிழந்துவிட்டனர்.