ஹவ்காங் வட்டாரத்தின் ஐந்து வெவ்வேறு இடங்களில் தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 35 வயது இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடவர் சனிக்கிழமை அதிகாலை வேளையில் ஹவ்காங் செண்ட்ரல், ஹவ்காங் அவென்யூ ஆகிய பகுதிகளில் நெருப்பு மூட்டியதாகக் கூறப்படுகிறது. மிதிவண்டிகள், கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், குப்பைகள் போன்றவை நெருப்பில் போடப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை மேற்கொண்டு போலிஸ் கேமராக்களின் உதவியுடன் அங் மோ கியோ பிரிவைச் சேர்ந்த போலிசார் சந்தேக நபரைப் பிடித்தனர். அதிகாலை 3.29 மணிக்கு புகார் செய்யப்பட்ட முதல் தீச்சம்பவத்தை அடுத்து 15 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. தீ மூட்டி குறும்புச் செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும்.

