அரசியல் ரீதியாக பன்முகத்தன்மை வேண்டும் என்ற விருப்பம் இங்கு நிரந்தரமாக இருக்கும் சாத்தியம் இருந்தாலும் பிளவுபடும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற மசெக மாநாட்டுக் கூட்டத்தில் இவ்வாறு பேசியிருந்தார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அரசியல் பன்முகத்தன்மை வேண்டும் என்ற மக்களின் விருப்பம் தெளிவாகத் தெரிந்ததாக அவர் கூறினார். இனி வரும் பொதுத் தேர்தல்கள், மசெகவுக்கு மேலும் சவால்மிக்கதாக இருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
மசெகவுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைப்பதை எதிர்க்கட்சியினர் தடுக்கலாம் என்றும் மசெகவை முறியடித்து ஆட்சி அமைக்கலாம் என்றும் மசெகவின் முதல் உதவித் தலைமைச் செயலாளராக உள்ள திரு ஹெங் குறிப்பிட்டார்.
நாட்டை வழிநடத்தும் உரிமையைக் கட்சி சம்பாதிக்க வேண்டும் என்றும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம் என்று உணர்ந்து கட்சி செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மற்ற நாடுகளில் பிளவுபட்ட அரசியல் நிலை இங்கு வேரூன்றாவிட்டாலும் அத்தகைய அழுத்தங்கள் ஏற்படும் சாத்தியம் உண்டு என்று திரு ஹெங் சுட்டினார்.

