மின் சிகரெட் சாதனம் விற்பனை: 14 பேர் மீது குற்றச்சாட்டு

மின் சிகரெட் சாதனம் விற்பனை: 14 பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read
a23859e9-0d2d-4bcf-ae6d-f1c40b9f1d4e
-

போதை தரும் ஆவியை முகர்வதற்குப் பயன்படுத்தப்படும் மின் சிகரெட் சாதனங்கள், அவை தொடர்பான இதர பொருட்கள் ஆகியவற்றை விற்றதாக கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து $5,000க்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களுக்கு மொத்தமாக $255,500 அபராதம் விதிக்கப்பட்டது. 20க்கும் 43க்கும் இடைப்பட்ட வயதுள்ள அந்தக் குற்றவாளிகளில் ஆக இளையவர், 15 மாதம் நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு $5,500 முதல் $47,500 வரை அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம்

தெரிவித்துள்ளது. அத்தகைய சாதனங்களையும் அவை தொடர்பான பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து வாங்கி, அவற்றைச் சமூக ஊடகங்கள், இணைய வர்த்தகத்தளங்கள் மூலம் சட்டவிரோதமாக அவர்கள் விற்றனர் என்று ஆணையம் தெரிவித்தது. அத்தகைய சாதனங்களின் உள்ளே நிக்கோட்டின் என்ற போதைப்பொருள் கலந்த ஒரு திரவம் இருக்கும்.

சிறிய மின்கலன் உதவியுடன் செயல்படும் அந்தச் சாதனம், திரவத்தை ஆவியாக்கி தரும். அந்த ஆவியை முகர்ந்தால் போதை மயக்கம் ஏற்படும்.

கடந்த 2018 முதல் இன்றைய தேதி வரை இந்த ஆணையம் இத்தகைய குற்றச்செயல்களின் பேரில் 35 பேர் மீது வழக்குத் தொடுத்துள்ளது. மின் சிகரெட் சாதனங்களைப் பற்றி விளம்பரம் செய்து அவற்றை விற்று வந்ததற்காக 2019ல் ஒருவருக்கு $99,000 அபராதம் விதிக்கப்பட்டது.