கொவிட்-19 சூழல் இருந்தாலும் இம்மாதம் இணையம் வழி சாதனை அளவில் வர்த்தகம் நடக்கும் என்று இங்குள்ள பகுதிவாரிக் கடைகளும் சில்லறை வர்த்தக நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. கொரோனா கிருமித்தொற்று காரணமாக பல பெரும் நிறுவனங்கள் கதவுகளை மூடிவிட்டன. இருந்தாலும் இணைய வர்த்தகம் கிடுகிடுவென பெருகி வருகிறது.
ஈசேடான், மார்க்ஸ் & ஸ்பென்சர் ஆகிய பகுதிவாரிக் கடைகள் இந்த ஆண்டில் முதல் தடவையாக இணையத்தில் 'லசாடா' என்ற விற்பனைத்தளம் மூலம் விற்பனையைத் தொடங்கி உள்ளன. மெட்ரோ நிறுவனமும் அந்த விற்பனைத் தளத்தில் இந்த ஆண்டில் முதல்தடவையாக விற்பனையைத் தொடங்கி இருக்கிறது.
பிஎச்ஜி நிறுவனம் சொந்தமாக இணையத்தில் விற்பனையை முடுக்கிவிட்டு உள்ளது. கொவிட்-19 காரணமாக இணைய விற்பனைப் பக்கம் தாங்கள் திரும்பி இருப்பதாக சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவது குறைந்து இருக்கிறது. ஆகையால் இணைய வர்த்தகத்தைப் பெருக்குவதுதான் விவேகமானதாக இருக்கும் என்று மார்க்ஸ் & ஸ்பென்சர் நிறுவனம் தெரிவித்தது.
கொவிட்-19 காரணமாக காற்பந்து விளையாட்டுகள் எல்லாம் குறைந்துவிட்டன. இதனால் கடைகள், பேரங்காடிக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. என்றாலும் அவை எல்லாம் வாடகையைச் செலுத்த வேண்டிய நிலைமை தொடர்கிறது.
இந்தச் சூழலில் இணைய வர்த்தகத்துக்கு மாறுவதுதான் விவேகமானதாக இருக்கும் என்று சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியின் தொழில்துறை மூத்த விரிவுரையாளர் ஏமஸ் டான் தெரிவித்தார். கொரோனா கிருமித்தொற்று காரணமாக மக்களிடம் இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் சூடுபிடித்து வருகிறது.
பொருட்களை வாங்க இனிமேல் கடைகளுக்குப் போகவேண்டாம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்களேயானால் இணையக் கொள்முதலில் இருந்து அவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். தொற்று காரணமாக சில கடைகள் மின்னிலக்கமயத்திற்கு அதிகமாக மாறிக்கொண்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

