தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், கட்டுமானம், கடல்துறை, பதனிடுதல் துறைகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கழிவுக் கட்டணத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டணத்தில் எந்த அளவுக்குக் கழிவு கொடுக்கப்படும் என்று தெரிவிக்காத அமைச்சின் பேச்சாளர், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் $25 வசூலிக்கப்படும் என்றும் கூறினார். 13 வட்டார சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள தனியார் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களால் இது மேற்கொள்ளப்படும் என்றும் அந்தப் பேச்சாளர் சொன்னார். இந்த 13 நிலையங்களில் ஐந்து நிலையங்கள், ஊழியர் தங்கும் விடுதிகளில் அமைந்துள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள இவ்வாண்டு அமைக்கப்பட்ட 13 நிலையங்களும் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் நடவடிக்கை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தேதியை முன்பதிவு செய்ய, முதலாளிகள் இம்மாதம் 9ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதிந்துகொள்ள வேண்டிய இணைய முகவரி: www.mom.gov.sg/register-flu-vaccine இந்த நடவடிக்கைக்கு, மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் 'ஏஸ்' எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையும் பராமரிப்பும் வழங்கும் ஈடுபாட்டுப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. ஆண்டிறுதி சளிக்காய்ச்சல் பருவம் நெருங்கி வருவதாலும், வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 கிருமிப் பரவலைக் கண்டுபிடிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சு விளக்கியது.
"சளிக்காய்ச்சல் அல்லது சளிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிக்காக மருத்துவ விடுப்பு தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தடுப்பூசி உதவும்.
"அதன் மூலம் முதலாளிகளுக்கு வேலைகள் தடைப்படுவது குறையும். கொவிட்-19 பரிசோதனைக்கு இட்டுச் செல்லும் சளிக்காய்ச்சலுக்குரிய அறிகுறி பாதிப்பிலிருந்து ஊழியர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.
"கொவிட்-19 உட்பட தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் அனைவருக்கும் பொதுவானது. நோயைத் தவிர்ப்பதில் அனை வருக்கும் பங்குண்டு.
"தங்கள் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யுமாறு முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

