தன் காதலியின் இரண்டு புதல்விகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஆடவருக்கு நேற்று 17 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 24 பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.
அந்தப் புதல்விகளை அந்த 36 வயது ஆடவர், 2012 முதல் ஆறு ஆண்டு காலமாக பாலியல் செய்கைகளுக்கு ஆளாக்கி வந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஒரு புதல்விக்கு வயது 10 ஆன போதும் மற்றொரு புதல்விக்கு 8 வயதான போதும் அந்த இருவரிடத்திலும் அவர் தவறாக நடந்துகொண்டார்.
சகோதரிகள் இருவரும் தங்களுக்கு இடையில் பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லிக்கொள்ளவே இல்லை. தங்கை அந்த ஆடவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் எல்லாவற்றையும் தன்னுடைய பள்ளி ஆலோசகர்களிடம் தெரிவித்துவிட்டார்.
அதனையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
குற்றவாளியான ஆடவர் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது வயது முறையே 19 மற்றும் 14 ஆகிறது.
இதில் சம்பந்தப்பட்ட யாருடைய பெயரையும் தெரிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

