சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) கடந்த வாரம் தொடங்கிய பயிற்சித் திட்டங்களில் பங்கெடுக்க 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆர்வம் காட்டியுள்ளன.
பயிற்சித் திட்டங்களை வடிவமைக்கவும் வாடிக்கையாளர் சேவை போன்ற பிரிவுகளில் ஊழியர்களை மேம்படுத்தவும் நிறுவனங்களுக்கு எஸ்ஐஏ பயிற்சி அளிக்கும்.
இந்தத் தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கோ சூன் பூங் நேற்று வெளியிட்டார்.
எப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிட்டத்தபட்ட $3.5 பில்லியன் இழப்பைப் பதிவு செய்தது.
இந்தச் சவாலை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் வர்த்தக உத்தியை திரு கோ அறிவித்தார்.
கொரோனா நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்சின் புத்தாக்க அணுகுமுறைகளில் புதிய பயிற்சித் திட்டங்களும் அடங்கும் என்றார் அவர்.
செலவுகளைக் குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எடுத்து வருகிறது.
அண்மையில், அதன் A-380 ரக விமானங்களை அது உணவகங்களாக மாற்றியது.
அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் மாத இழப்பைக் குறைத்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ஏறத்தாழ $350 மில்லியன் இழப்பை அது பதிவு செய்தது. அந்த எண்ணிக்கை தற்போது $300 மில்லியனுக்குக் குறைந்துள்ளது.
தொடர்ந்து துடிப்புடனும் நீக்குப்போக்குடனும் இருந்து வாய்ப்புகளைத் தேடப்போவதாக திரு கோ தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் பயணிகள் எண்ணிக்கை படுவீழ்ச்சி கண்டது. இதன் காரணமாகவே கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த பயணிகள் எண்ணிக்கையில் 9.5 விழுக்காடு பயணிகளை மட்டுமே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த மாதம் பதிவு செய்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 16 விழுக்காட்டுக்கு உயர்த்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலக்கு கொண்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பை ஈடுகட்ட, சரக்குப் போக்குவரத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவனம் செலுத்தி வருகிறது.
பாதி அளவு மட்டுமே நிரம்பியுள்ள விமானங்களில் கூடுதல் சரக்குகளை ஏற்றிச் செல்ல இருக்கைகளை அகற்றியதாக தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 பரிசோதனைகளின் முடிவுகளைத் தற்போது விரைவாகப் பெற முடிவதால் கூடுதல் பயணிகள் விமானங்களில் பயணம் செய்யும் காலம் விரைவில் வரக்கூடும் என்று திரு கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"அனைத்துப் பயண ஏற்பாடுகளும் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகின்றன.
"இத்தகைய மருத்துவப் பரிசோதனைகளில் தொடர்ந்து முதலீடு செய்வதால் விமானத்தில் மேலும் பலர் பயணம் செய்யலாம்," என்று திரு கோ தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் கொரோனா கிருமிப் பரவல் அதிகரித்தால் இவ்வளவு நாட்களாக கண்டு வரப்படும் முன்னேற்றங்கள் அடியோடு அழிந்துவிடும் என்று திரு கோ எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, தனது நிதி நிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்போவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
தனது விமானங்களை விற்பது அல்லது குத்தகைக்கு விடுவது போன்ற நடவடிக்கைகளின்கீழ் வருமானம் ஈட்ட அது திட்டமிட்டுள்ளது.
சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய பயணங்களுக்கு ஏற்பாடு செய்யவும் அது முடிவெடுத்துள்ளது. இதனால் செலவினங்களும் குறையும் என்று அது கூறியது.

