அமலாக்க அதிகாரிகளை அரிவாளால் தாக்கியவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

1 mins read
d8f25599-6e69-4ccb-b31b-e8038c4a1df7
சம்பவ இடத்தில் அலறல் சத்தம் கேட்டதாக அந்தப் பகுதிவாசிகள் தி நியூ பேப்பரிடம் தெரிவித்தனர். படம்: ஷின் மின் டெய்லி -
multi-img1 of 2

செம்பவாங் ரோடில் உள்ள கேன்பரா லிங்கில் அமைந்திருக்கும் புளோக் 503Cல், கடந்த திங்கட்கிழமை இரவு 7.40 மணியளவில், செர்ட்டிஸ் அமலாக்க அதிகாரிகளை அரிவாள் கொண்டு தாக்கிய 30 வயது சிங்கப்பூரர் விக்னேஸ்வரன் சிவன் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குப்பை போடுதல், புகைபிடித்தல் போன்ற குற்றச்செயல்களைத் தடுக்கும் அமலாக்கப் பணிகளில் முகமது அஃபிக் முகமது ஜமில் எனும் செர்ட்டிஸ் அதிகாரியுடன் மற்றொரு அதிகாரியும் பணியில் இருந்ததாக செர்ட்டிஸ், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை தெரிவித்திருந்தன.

அந்த இரு செர்ட்டிஸ் அதிகாரிகளும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அமலாக்கப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அனுமதி இல்லாத இடத்தில் புகை பிடித்ததற்காக ஒருவருக்கு அபராத ஆணை அளித்ததற்காக திரு அஃபிக்கை விக்னேஸ்வரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் அலறல் சத்தம் கேட்டதாக அந்தப் பகுதிவாசிகள் தி நியூ பேப்பரிடம் தெரிவித்தனர்.

சம்பவம் நிகழ்ந்து 7 மணி நேரத்துக்குள் விக்னேஸ்வரனை போலிசார் பிடித்தனர். அவர் பயன்படுத்திய அரிவாள், சம்பவ இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

விக்னேஸ்வரனுக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீண்டும் டிசம்பர் 9 அன்று விசாரணைக்கு வரும்.