லிம் சூ காங் பண்ணையில் சட்டவிரோதமாக வேலை செய்ததாக எழுவர் கைது

லிம் சூ காங் பண்ணையில் சட்டவிரோதமாக வேலை செய்ததாக எழுவர் கைது

2 mins read
2eac6ad2-64d6-49fb-bd5a-fb3c78c571ca
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, லிம் சூ காங்கில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்த சந்தேகத்தின் பேரில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 20 முதல் 42 வயதுக்குட்பட்ட மியன்மார் நாட்டு ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமையன்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் சிங்கப்பூர் போலிஸ் படையும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, சுங்கை தெங்கா சாலையில் உள்ள அந்தக் காய்கறிப் பண்ணையில் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து ஆடவர்கள் எழுவரும் உறங்கிக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் குடிநுழைவு அனுமதியின்றி சிங்கப்பூரில் தங்கியிருந்ததையும் வேலை அனுமதி அட்டையின்றி அந்தப் பண்ணையில் வேலை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் அதன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது; விசாரணை தொடர்கிறது.

அனுமதிக் காலம் முடிந்த பின்னரும் சிங்கப்பூரில் தங்கியிருப்போருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்து இருக்கிறது.

அத்துடன், குடிநுழைவுக் குற்றவாளிகளை வேலைக்கு வைத்து இருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் கூறியிருக்கிறது.

குடிநுழைவுக் குற்றவாளி ஒருவரை வேலையில் அமர்த்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்குக் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் $6,000 வரை அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கும்போது அல்லது அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது அவர்களின் குடிநுழைவு அனுமதியைச் சோதித்து, உறுதிசெய்துகொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் ஆணையம் நினைவூட்டி இருக்கிறது.