அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்ஸ், கொவிட்-19க்குப் பிறகு தென் கிழக்கு ஆசியாவில் சுகாதாரம், கல்வித் தொழில்நுட்பத் துறைகளில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் தீவிரமாகப் பேச்சு நடத்திவருகிறது.
கொவிட்-19 காரணமாக மின்னிலக்கச் சுகாதாரத் துறை மற்றும் கல்விச் சேவைகளுக்குத் தேவை அதிகரித்துள்ளது. ஆகையால் இந்தத் துறைகள் பக்கம் தெமாசெக் திரும்பி இருக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறைகளில் பெரும் பெரும் நிறுவனங்கள் தலை எடுப்பதைக் காணலாம் என்று தெமாசெக்கின் தென்கிழக்கு ஆசியப் பிரிவுக்குத் முன்பு தலைமை ஏற்று இருந்த ரோஹித் சிப்பாஹிமலானி தெரிவித்து இருக்கிறார்.
அத்தகைய நிறுவனங்கள் சிலவற்றுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தெமாசெக் முதலீடு செய்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் திரு ரோஹித் கூறினார். இருந்தாலும் திட்டவட்டமான இலக்கு எதையும் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.
தென்கிழக்கு ஆசியாவின் மின்னிலக்கப் பொருளியல் 2025ஆம் ஆண்டில் மும்மடங்கு பெருகி அமெரிக்க டாலர் $300 பில்லியனுக்கும் அதிக மதிப்பை எட்டும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த ஆய்வை கூகல், பைன் & கோ ஆகியவற்றுடன் சேர்ந்து தெமாசெக் கூட்டாக நடத்தியது. ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி இருக்கும் ஆண்டறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
கணினி வழி வர்த்தகம் உள்ளிட்ட முக்கியமான நான்கு துறைகளை அது ஆராய்ந்துள்ளது. என்றாலும் சுகாதாரத்துக்கும் கல்வித் தொழில்நுட்பத்துக்கும் முதன்முதலாக அந்த அறிக்கை ஒரு பிரிவையே ஒதுக்கி இருக்கிறது.
கொவிட்-19 காலகட்டத்தில் பிரதான மின்னிலக்க சுகாதாரப் பராமரிப்புச் செயலிகளின் புழக்கம் நான்கு மடங்கு அதிகமானது. அதேவேளையில் முன்னணியில் இருக்கும் கல்வித் துறை செயலிகளின் பயனீடு மூன்று மடங்கு கூடியது.
இதன் காரணமாக சுமார் 300 மில்லியன் மக்கள்தொகையை கொண்ட இந்தோனீசியா போன்ற மருத்துவர்கள், மருத்துவமனைகள் குறைவாக உள்ள நாடுகளில் அதிக முதலீடுகள் இடம்பெற்றன.
இணையம் வழி கல்வி மற்றும் பயிற்சிகளைக் கற்றுத்தரும் இணையத்தளங்களில் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இணையம் வழி நடக்கும் வர்த்தகத் துறை, தெமாசெக் நிறுவனத்தைக் கவரக்கூடிய துறையாகத் தொடரும் என்று திரு ரோஹித் தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து தெமாசெக் நிறுவனத்திற்கு இணைய வர்த்தகம் ஓர் ஈர்ப்பு அம்சமாக இருக்கும் என்று திரு சிப்பாஹிமலானி குறிப்பிட்டார்.

