விலையில் $25,000 வரை கழிவு; மாசுபடுத்தும் வாகனத்துக்கு $25,000 கூடுதல் செலவு
கரிமப் புகையை வெளியேற்றாத, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத மின்சார கார்களை வாங்குவோருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 2020 டிசம்பர் 31 வரை மேலும் $5,000 தள்ளுபடி கிடைக்கும்.
வாகனப் புகைக் குறைப்புத் திட்டத்தின்கீழ் இது கிடைக்கும்.
அதே காலகட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத டாக்சிகளுக்கு உரிய மானியம் $7,500 அதிகரிக்கும்.
தனியார் வாகனங்கள் வெளியே தள்ளும் புகையைக் குறைத்து அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குச் சாதகமாக மாற உரிமையாளர்களை ஊக்கமூட்டுவது வாகனப் புகைக்குறைப்புத் திட்டத்தின் நோக்கம்.
மானிய அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணமாக கார்களுக்கு $5,000 விதிக்கப்படும். டாக்சிக்கு இந்த அதிகரிப்பு $7,500 ஆக இருக்கும்.
இந்தப் புதிய அதிகரிப்பு இந்த ஆண்டு தொடங்க இருந்தது. ஆனால் இதற்கு ஏற்ப இத்துறையினர் தயாராக வேண்டும் என்பதால் இது 2021 ஜூலையில்தான் தொடங்கும். 2022 டிசம்ர் 31 வரை நடப்பில் இருக்கும்.
தேசிய சுற்றுப்புற வாரியமும் நிலப்போக்குவரத்து ஆணையமும் கூட்டு அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தன.
வாகனங்களில் உள்ளெரி இயந்திரங்களை (பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்) 2040க்குள் கட்டம் கட்டமாக அகற்றிவிட வேண்டும் என்று சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நிறைவேற்ற இப்புதிய நடவடிக்கைகள் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தாத மின்சார கார்கள் போன்ற வாகனங்களுக்கு அதிக தள்ளுபடி இருக்கும் என்பதால் அவர்கள் விலையில் மொத்தம் $25,000 தள்ளுபடி ெபறலாம்.
அசுத்தப்படுத்தும் வாகனங்களுக்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகையால் இத்தகைய வாகனங்களை வாங்குவோருக்கு $25,000 கூடுதலாக செலவாகும்.
வாகனப் புகைக் குறைப்புத் திட்டம் 2018ல் நடப்புக்கு வந்தது. சிங்கப்பூர் சாலைகளில் வாகனங்கள் வெளியிடும் கரிமப் புகையைக் குறைப்பது அதன் நோக்கம்.
அந்தத் திட்டம் ஐந்து தூய்மைக் கேட்டு அம்சங்களைப் பொறுத்து வாகனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றுக்கு ஏற்ப தள்ளுபடி கிடைக்கும். அல்லது அதிக தொகை விதிக்கப்படும்.
அந்தத் திட்டம் சுற்றுப்புறத்தை அவ்வளவாக மாசுபடுத்தாத வாகனங்களை மக்கள் வாங்க ஊக்க மூட்டி வந்துள்ளதாக சுற்றுப்புற வாரியமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்துள்ளன.
மின்சார வாகனங்களுக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கும் இடையில் விலை வேறுபாடு உள்ளது. இது மக்கள் அத்தகைய வாகனங்களைத் தேர்ந்து எடுப்பதில் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. மின்சார வாகனங்களின் விலை அதிகம்.
இந்நிலையில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை வாங்குவோருக்கு மொத்தம் $45,000 பணம் மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு வகை வாகனங்களின் விலைகளும் 2025ல் அல்லது அதற்கு முன்பாகவே ஏறக்குறைய சமமான அளவுக்கு வந்துவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூரில் 2020 ஜனவரி வாக்கில் மொத்தம் 1,125 மின்சார வாகனங்கள் சாலைகளில் ஓடியதாகத் தெரியவந்துள்ளது.

