உலகில் திறனாளர்களுக்கான ஆக போட்டித்தன்மைமிக்க நாடுகளுக்கான பட்டியலில் சிங்கப்பூர் ஒரு படி ஏறி ஒன்பதாவது இடத்தை எட்டியுள்ளது. என்றாலும், வெளிநாட்டுத் திறனாளர்களைச் சார்ந்திருக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற மற்ற நாடுகளைப் போலவே எதிர்காலத்தில் இப்பட்டியலில் சிங்கப்பூரின் தரநிலை கொவிட்-19 சூழலால் பாதிக்கப்படலாம்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வர்த்தகக் கல்லூரியான ஐஎம்டி வெளியிட்டிருக்கும் இந்த ஆக அண்மைய பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர். பட்டியலின் முதல் மூன்று இடங்களை சுவிட்சர்லாந்து, டென்மார்க், லக்ஸம்பெர்க் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
தனது போட்டித்தன்மையை வலுப்படுத்த, திறனாளர்களை ஈர்த்து அவர்களை மேம்படுத்தும் பொருளியலின் ஆற்றலை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.
மொத்தம் 63 பொருளியல்களில் மனிதவளத்தை மேம்படுத்துவது, ஈர்ப்பது, தக்கவைப்பது ஆகிய அம்சங்களை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள நாடுகளில் எட்டு நாடுகள் ஐரோப்பாவை சேர்ந்தவை. தரமான கல்வி, சமூக முன்னேற்றம் போன்ற அம்சங்களில் அவை சிறந்து விளங்கியதை அறிக்கை சுட்டியது.
"ஒட்டுமொத்தமாக பார்க்கையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளே உலகில் திறனாளர்களை ஈர்க்கும் ஆகப் போட்டித்தன்மைமிக்க நாடுகளாக விளங்குகின்றன. எனினும், அந்த நாடுகளில் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால், மனிதவள பற்றாக்குறையைத் தீர்க்க உயர் திறன் கொண்ட ஊழியரணியை ஈர்க்க அவை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்," என்று ஐஎம்டி உலக போட்டித்தன்மை நிலையம் அதன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஆசிய பசிபிக் வட்டாரம் மேற்கூறப்பட்ட அம்சங்களில் நிலையாக இருந்து வருவதாகக் கூறிய அந்த அறிக்கை, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டது. ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழியரணியில் பெண்களின் பங்கேற்பு சற்று அதிகரித்தாலும், இந்த அம்சத்தைப் பொறுத்தவரை மற்ற வட்டாரங்களில் உள்ள நாடுகள்தான் சிறந்து விளங்குவதாக அறிக்கை கூறியது.
திறனாளர்களை ஈர்க்கும் நாடுகள்

