கொவிட்-19 தடுப்பூசி உத்தி: பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை நியமித்தது சிங்கப்பூர்

கொவிட்-19 தடுப்பூசி உத்தி: பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை நியமித்தது சிங்கப்பூர்

2 mins read
59e5e920-db63-44ac-a6e8-069569d7ca7c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தடுப்­பூசி உத்தி தொடர்­பில் அர­சாங்­கத்­தி­டம் பரிந்­து­ரை­க­ளைச் சமர்ப்பிக்க 14 உறுப்­பி­னர்­கள் கொண்ட நிபுணர் குழு ஒன்றை சுகா­தார அமைச்சு அமைத்துள்ளது.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூ­சி­கள் பாது­காப்­பா­க­வும் ஆக்­க­க­ர­மா­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தை­யும் இக்­குழு உறுதி செய்­யும்.

சுகா­தார அமைச்­சின் மருத்­துவச் சேவைப் பிரிவு இயக்­கு­ந­ருக்கு மூத்த ஆலோ­ச­க­ரான இணைப் பேரா­சி­ரி­யர் பெஞ்­ச­மின் ஓங் இந்தக்­கு­ழு­விற்­குத் தலைமை தாங்­கு­வார் என்று அமைச்சு நேற்று வெளி­யிட்ட செய்தி அறிக்­கை­யில் தெரி­வித்­தது. சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூத்த துணைத் தலை­வர் (சுகா­தா­ரக் கல்வி மற்­றும் வளங்­கள்) பத­வி­யை­யும் அவர் வகிக்­கி­றார்.

தொற்­று­நோய், நோய்த்­த­டுப்பு போன்ற சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­களும் இந்­தக் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர். தலை­மைச் சுகா­தார விஞ்­ஞா­னி­யும் சுகா­தார அமைச்­சின் சுகா­தா­ரப் பரா­மரிப்பு உரு­மாற்ற அலு­வ­ல­கத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மான பேரா­சி­ரி­யர் டான் சோர் சுவான், சிங்­கப்­பூர் மருத்­துவ ஆய்வு, புத்­தாக்­கக் கூட்­ட­மைப்­பின் தலைமை நிர்­வாகி டாக்­டர் டேனி சூன், பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, நல்­வாழ்­வுப் பிரி­வுத் துணைத் தலை­வர் டாக்­டர் லிசா வி உள்­ளிட்­டோர் இந்தக் குழு­வில் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­னர்.

"தடுப்­பூ­சி­களை மதிப்­பி­டும் முயற்­சி­யில் இந்த நிபு­ணர் குழு ஈடு­ப­டு­வ­தோடு சிங்­கப்­பூ­ரில் அவை கிடைக்­கும்­போது கொவிட்-19க்கு எதி­ரான பொருத்­த­மான தடுப்­பூ­சி­களை இக்­குழு பரிந்­து­ரைக்­கும்," என்று அமைச்சு கூறி­யது.

கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் குறித்த ஆக அண்­மைய தக­வல்­களைக் கருத்­தில் கொண்டு மதிப்­பி­டு­வதே இக்­கு­ழு­வின் பொறுப்பு என்று அமைச்சு விவ­ரித்­தது.

தடுப்­பூ­சி­கள் குறித்த ஆக அண்­மைய மருத்­து­வத் தக­வல்­கள் வெளி­வ­ரும்­போது அவற்­றின் பாது­காப்புத்தன்மை, திறன், சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யின் வெவ்­வேறு பிரி­வி­ன­ர் பயன்படுத்த அவற்­றின் பொருத்­தம் போன்ற அம்­சங்­க­ளை இந்தக் குழு மதிப்­பி­டும்.

அதன் பிறகு மக்­கள்­தொ­கை­யின் குறிப்­பிட்ட பிரி­வி­ன­ருக்­குத் தடுப்­பூ­சி­களை வழங்­கு­வது குறித்த பரிந்­து­ரை­களை இக்­குழு அளிப்­பதோடு, சிங்­கப்­பூ­ருக்­கான ஒட்­டு­மொத்த தடுப்­பூசி உத்தி குறித்­தும் அது விவ­ரிக்­கும்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இக்­குழு அறி­விக்­கப்­பட்­டது. இந்தக் கு­ழு­வின் நிய­ம­னம் அக்­டோ­பர் 5ஆம் தேதி நடப்­புக்கு வந்­த­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அக்­டோ­பர் 13ஆம் தேதி இந்த நிபு­ணர் குழு முதன்­மு­றை­யாக கூடி­யது. பரி­சோ­தனை கட்­டத்­தில் உள்ள பல்­வேறு தடுப்­பூ­சி­கள் குறித்து கலந்­தா­லோ­சிக்க கடந்த மாதம் இக்­குழு பல­முறை சந்­தித்­தது. மேலும், சிங்­கப்­பூர் சூழ­லில் தடுப்­பூ­சி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது குறித்­தும் இக்­குழு கலந்­தா­லோ­சித்து வரு­கிறது.