கழிவுப் பொருட்களை மறுபயனீட்டுப் பொருட்களாக மாற்றும் பல நிறுவனங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தீ மூளுவது, வெடிப்புச் சம்பவங்கள் ஏற்படக்கூடிய அளவுக்குக் கிட்டத்தட்ட 140 பாதுகாப்புக் குறைபாடுகளை அதிகாரிகள் கண்டனர்.
எளிதில் தீ பிடிக்கக்கூடிய, நச்சுத்தன்மை கொண்ட வாயுவைக் கையாண்ட விதம் சரியில்லை என்பதையும் தீத் தடுப்பு பாதுகாப்புக்கு இடையூறுகள் இருந்ததையும் அதிகாரிகள் அக்டோபர் மாதம் நடத்திய சோதனைகளில் கண்டுபிடித்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உதவியுடன் 30க்கும் அதிகமான நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சாமான்கள் கண்டபடி குவிக்கப்பட்டு கிடந்ததையும் மின்சார இணைப்புகள் பாதுகாப்பு இல்லாதபடி இருந்ததையும் பொருட்களை வாக னங்கள் மூலம் தூக்கி அங்கும் இங்கும் நகர்த்தும் ஏற்பாடுகள் சரியாக இல்லை என்பதையும் பரி சோதனை அதிகாரிகள் கண்டனர்.
ஆபத்துகள் பற்றிய மதிப்பீடுகளை செய்வது, பாதுகாப்பான வேலை முறைகளை ஊழியர்கள் கடைப்பிடிக்க வழி செய்வது, சரியான சாதனங்கள் இல்லாமல் பொருட்களை ஊழியர்கள் கையாளவில்லை என்பதை உறுதிப்படுத்துவது ஆகியவை போன்ற நட வடிக்கைகளை எடுத்து அவற்றின் மூலம் முதலாளிகள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை மனிதவள அமைச்சு ஃபேஸ்புக்கில் நினைவூட்டியது.
ஊழியர்களின் பாதுகாப்பில் எப்போதுமே விழிப்புநிலையில் இருந்து வரவேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சு, அவர்களைப் பாதுகாக்க தேவையான நடைமுறைகள் இருப்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
ஆண்டு இறுதி விழாக்காலம் வருவதால் நிறுவனங்கள் பல வேலைகளையும் வேகமாக செய்யவேண்டி இருக்கும் என்பதைச் சுட்டிய அமைச்சு, சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் நிகழ்ந்த பல சம்பவங்களில் 11 ஊழியர்கள் மாண்டதை நினைவு படுத்தியது.
நல்ல நடைமுறைகளைப் பின்பற்றும் பல நிறுவனங்களையும் தங்கள் அதிகாரிகள் கண்டனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் வேலைகளை நிறுத்தும்படி அமைச்சு உத்தரவிடும்.

