பிரதமர் லீ: இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேரவேண்டும் என விரும்புகிறேன்

பிரதமர் லீ: இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேரவேண்டும் என விரும்புகிறேன்

1 mins read
5946bc61-533e-4c32-89ed-1a6b360f60ea
-

வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ (ஆர்சிஇபி) ஒப்பந்தத்திலிருந்து இந்தியா பின்வாங்கியிருந்தாலும் வருங்காலத்தில் அதனால் சேருவதற்கான வழி உள்ளது என்றும் அதனை அந்நாடு பயன்படுத்திக்கொள்ள தாம் விரும்புவதாகவும் சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.

வர்த்தகச் சமநிலையின்மை குறித்த சில அக்கறைகளால் இந்தியா, பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக கடந்தாண்டு நவம்பர் அறிவித்தது.

வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் இருக்கும் நாடுகள் எப்படி ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் மேன்மேலும் வளர உதவலாம் என்று பங்குபெறும் ஆர்சிஇபி நாடுகளின் பன்முகத்தன்மை காட்டுவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார். தற்போது ஆசியான் நாடுகளுக்கும் மற்ற ஐந்து பங்காளித்துவ நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்த ஆர்சிஇபி ஒப்பந்தம் அடித்தளமாகக் கொண்டுள்ளது. ஆறு ஆசியான் நாடுகளும் மூன்று பங்காளித்துவ நாடுகளும் உறுதி செய்த பிறகு இந்த ஒப்பந்தம் நடப்புக்கு வரும்.

ஒப்பந்தம் குறித்து நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட இந்திய பொருளியல் விவகார அமைச்சு , ஆசியானுடனான வர்த்தக உறவை ஆழப்படுத்த இந்தியா கடப்பாடு கொண்டிருப்பதாக தெரிவித்தது. " எங்களது நிலைப்பாடு தெரிந்ததுதான். எங்களது அக்கறைகளை பூர்த்தி செய்யாததால் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் நாங்கள் இணையவில்லை," என்று பொருளியல் விவகார அமைச்சர் ரிவா கங்கூலி தாஸ் தெரிவித்தார்.