இஸ்தானாவில் தீபாவளியன்று மெய்நிகர் வடிவில் நடத்தப்பட்ட பொதுமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப், முதன்முதலாக ஃபேஸ்புக் நேரலைச் சேவை வழியாக பொதுமக்களுடன் உரையாடினார்.
அதிபர் மாளிகையில் தமக்குப் பிடித்த பகுதி என்ன (அவருக்கு பிடித்தது அங்குள்ள பூந்தோட்டங்கள்) மாளிகைளில் அவர் தங்குகிறாரா (இல்லை) போன்ற கேள்விகள் திருவாட்டி ஹலிமாவிடம் கேட்கப்பட்டது. தாம் அதிபரான பிறகு கூடுதல் சிங்கப்பூரர்களை இஸ்தானாவுக்குள் வரவழைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது கூறினார். அதிபர் மாளிகைக்குச் செல்லும் வாய்ப்பு பலருக்குக் கிட்டவில்லை என்று கேள்வியுற்ற பிறகு அதிகம் பேருக்கு இந்த மாளிகையைத் திறக்க முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதிபர் மாளிகைத் தோட்டங்களில் விரும்புவோர் தொண்டூழியத் தோட்டக்காரர்களாக பணியாற்ற வகைசெய்யும் திட்டங்கள், அந்திமகால பராமரிப்பு இல்லங்களில் உள்ள நோயாளிகளையும் முதியோரையும் அழைப்பது உள்ளிட்டவை அவர் எடுத்துள்ள முயற்சிகளாகும். அத்துடன், அதிபர் சவால் திட்டம் காலப்போக்கில் பரிணமித்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "உடற்குறை உள்ளோரையும் வசதி குறைந்தோரையும் ஊக்கப்படுத்துவதில் கூடுதல் கவனத்தைச் செலுத்தியுள்ளோம். இந்த ஊக்கப்படுத்துதல் முக்கியம் என நாங்கள் கருதுகிறோம்," என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டின் அதிபர் சவாலின் கருப்பொருளான 'மின்னிலக்க ரீதியாக பிறரை ஒருங்கிணைக்கும் சமுதாயத்தை உருவாக்குதல்' என்பதைப் பற்றியும் திருவாட்டி ஹலிமா கருத்துரைத்தார். தற்போதைய கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில் இது அதிகம் தேவைப்படுவதாகக் கூறிய திருவாட்டி ஹலிமா, போதிய வளங்களோ திறன்களோ இல்லாதவர்கள் பின்தங்கலாம் என அக்கறை கொள்வதாகவும் கூறினார்.