இந்த ஆண்டு கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் தீபாவளிக் கொண்டாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றன.
வாழ்வில் புதிய தொடக்கத்தை வரவேற்க பலரும் நேற்று கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். வேறு சிலரோ வீட்டில் இருந்தவாறு இணையம் மூலம் பிரார்த்தித்தனர்.
கோயில்களில் கூட்டத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு டேங் ரோடு, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றது. அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள், தங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதி செய்தனர். கோயிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றதாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாகி திரு டி.ராஜசேகர் கூறினார்.
"தற்போதைய சூழலால் பெரிய அளவில் ஒன்றுகூட முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்கின்றனர். எனினும், கோயில்களில் சிறிது நேரம் வழிபட சிலர் விரும்பினர். அவர்கள் அவ்வாறு செய்ய நாங்கள் அனுமதித்தோம்," என்றார் அவர்.
இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தனர்.
மூத்தோர் உட்பட கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்காக இணையத்தில் வழிபாடுகளை நேரலையாக ஒளிபரப்பும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, பல்வேறு அமைப்புகளும் முன்வந்து 144 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஏறத்தாழ 168,000 ஊழியர்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பைகளை வழங்கின.
இங்குள்ள பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களின் தீபாவளி வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பதிவு செய்து சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு ஊழியர்களிடம் காணொளிகளைப் பகிர அந்த அமைப்புகள் உதவின. மனிதவள அமைச்சின் 'ஏஸ்' எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையும் பராமரிப்பும் வழங்கும் ஈடுபாட்டுப் பிரிவு, இந்து அறக்கட்டளை வாரியம், சீக்கியர் கழகங்கள் ஒருங்கிணைப்பு மன்றம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்த இந்த முயற்சியில் 1,000க்கும் அதிகமான தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.

