நீரிழிவு உள்ளோருக்கு தனித்துவ பயிற்சிகள்

நீரிழிவு உள்ளோருக்கு தனித்துவ பயிற்சிகள்

2 mins read
5be3d039-e9e1-4410-94bf-4f35431178d4
-

நீரிழிவுப் பிரச்சினை உடையோர் தங்களது மருத்துவ நிலையைத் திறம்பட சமாளித்து ஆரோக்கியமாக வாழ உதவும் வகையில் சுகாதாரப் பராமரிப்பு குறித்த தனிப்பட்ட பயிற்சியை விரைவில் பெறலாம். மேலும், விளையாட்டு வசதிகள், திட்டங்களை அவர்கள் பயன்படுத்தலாம்.

இதன் தொடர்பில் 'ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி' அமைப்பும் 'டையபிட்டிஸ் சிங்கப்பூர்' அமைப்பும் உடன்பாடு ஒன்றில் இன்று கையெழுத்திட்டன. 'ஆக்டிவ் எஸ்ஜி' வசதிகளைப் பயன்படுத்துவதில் சுகாதாரப் பயிற்றுநர்களிடம் இருந்து நீரிழிவு நோயாளிகள் பயிற்சி பெறலாம்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று நடைபெற்ற 'உலக நீரிழிவு தினம் 2020' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சுகாதார இரண்டாம் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இந்த ஏற்பாட்டை அறிவித்தார். "நீரிழிவுக்கு எதிரான போரில் நமது கவனத்தை நாம் விட்டுவிடக்கூடாது. கொவிட்-19 சூழலிலும் நீரிழிவு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக தொடர்கிறது," என்று அவர் சொன்னார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான திரு மசகோஸ், மூன்றில் ஒரு சிங்கப்பூரருக்கு தமது வாழ்நாளில் நீரிழிவுப் பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறினார். இரண்டாம் வகை நீரிழிவுப் பிரச்சினை ஏற்பட "உடல்பருமனும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வாழ்க்கைமுறையும்" முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் எச்சரித்தார். நீரிழிவை எதிர்கொள்ள ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு திரு மசகோஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார். நீரிழிவுப் பிரச்சினை உடையோர் தொடர்ந்து தங்களது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் மருத்துவப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்க மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். 'ஹெல்ஹப்' இணையப் பக்கத்தில் நீரிழிவுப் பிரச்சினையைச் சமாளிப்பது தொடர்பில் பல தகவல்களை மக்கள் நாடலாம் என்றும் அவர் சொன்னார். நாற்பது வயதைக் கடந்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நாள்பட்ட நோய்களுக்காக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று திரு மசகோஸ் அறிவுறுத்தினார். 18க்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 'ஹெல்த்ஹப்' தளத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நீரிழிவால் ஏற்படும் அபாயத்தை மதிப்பீடு செய்யலாம்.

இந்நிலையில், நீரிழிவு சம்பவங்களைக் கையாளுவதில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் எவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது பற்றியும் அமைச்சர் மசகோஸ் பேசினார்.

இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்த இணையவாசல் மூலம் நீரிழிவு ஏற்படுவதைத் தடுப்பதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நோயாளிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியும். கொவிட்-19 சூழலில், நீரிழிவு உட்பட நாள்பட்ட நோய் உடையோருக்கு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களால் காணொளிக் காட்சி மூலம் சேவை வழங்கவும் முடிகிறது. 'டையபிட்டிஸ் சிங்கப்பூர்' அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஜூரோங் வெஸ்ட் மற்றும் பூன் கெங் பகுதியில் இருக்கும் அதன் அலுவலகங்களில் இம்மாத இறுதி வரை சளிக்காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். "நீரிழிவுக்கு எதிரான போர் இன்னமும் முடியவில்லை. இதில் வெற்றியடைய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். நமது மற்றும் நமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ள நம் அனைவருக்கும் பங்குண்டு," என்று திரு மசகோஸ் வலியுறுத்தினார்.