நிச்சயமற்ற பொருளியல் சூழல் நிலவிவரும் வேளையில், தேசிய சேவையாளர்கள் விரைவில் திறன் பயிற்சித் திட்டங்களைப் பயன்படுத்த முடியும். சாஃப்ரா அமைப்பு, அரசாங்க அமைப்புகள், கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் இது சாத்தியமாகும் என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.
இதன் தொடர்பிலான திறன் பயிற்சித் திட்டங்களை வழங்க சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
"தற்போதைய வேலைச் சூழலில், கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தேசிய சேவையாளர்கள் பலனடைவர்," என்றார் சாஃப்ரா அமைப்பின் தலைவருமான திரு ஸாக்கி.
சாஃப்ரா தெம்பனிஸ் வளாகத்தில் நடைபெற்ற 'லிபர்ட்டி சாஃப்ரா ஸ்விம் ஃபார் ஹோப்' நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திட்டங்களை அறிவித்தார்.
1,400க்கும் அதிகமான தேசிய சேவையாளர்கள், தொண்டூழியர்கள் ஈடுபடுத்தப்பட்ட ஓராண்டுகால உத்திபூர்வ மறுஆய்வுக்குப் பிறகு இவை அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய சேவையாளர்களுக்கான பாடப் பிரிவுகள், சாஃப்ராவின் பரவலான திட்டங்கள் குறித்த விவரங்கள் இன்னமும் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

