சில வர்த்தக தொழில்துறை சொத்துகளை வாங்கி இருப்பவர்கள், கொவிட்-19 பாதிப்பு காரணமாக தங்களுடைய ஒப்பந்தக் கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கக்கூடும்.
இவர்களுக்கு எதிராக சட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கான தற்காலிக நிவாரண காலம் மேலும் இரண்டு முதல் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. சட்ட அமைச்சு நேற்று இதனை அறிவித்தது. கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ், குறிப்பிட்ட கொள்முதல் ஒப்பந்தங்களுக்கான நிவாரணக் காலம் நீட்டிக்கப்படும்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் அடைப்பு ஏற்பாடு நடப்புக்கு வரும் வரை, சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைப்பதை இது உறுதிப்படுத்தும்.
புதிய கடன் அடைப்பு ஏற்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் நவம்பர் 3ஆம் தேதி விவாதிக்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக வருமானம் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ள சிறிய, மிகச் சிறிய நிறுவனங்கள் மீண்டும் பேச்சு நடத்தி சில ஒப்பந்தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அல்லது தண்டத்தொகை எதுவுமின்றி அவற்றை முன்னதாகவே முடித்துக்கொள்ளவும் அந்த ஏற்பாடு உதவும்.
வர்த்தக சாதனங்கள் அல்லது வர்த்தக வாகனங்களுக்கான தவணைக் கட்டண வாங்கு முறை, நிபந்தனைக்குட்பட்ட விற்பனைகள், வாடகை ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கான இப்போதைய நவம்பர் 19 காலக்கெடு அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.

