சுற்றுலா தலத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கான மாறி வரும் மனிதவளத் தேவைகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள ஏதுவாக கரையோரப் பூந்தோட்டங்களின் ஊழியர்கள் விரைவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்குச் செல்லவிருக்கின்றனர்.
தொடக்கமாக, அந்தப் பூந்தோட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து 120 ஊழியர்கள், வாடிக்கையாளர் விவகார நிர்வாகம், பாதுகாவல் செயல்முறை, பயனீட்டாளர் அனுபவம் போன்ற மற்ற திறன்களில் பயிற்சி பெறுவார்கள்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஒரே ஊழியர் குழுமத்தில் சேர்க்கப்பட்டு, கொவிட்-19 கொள்ளை நோயின் விளைவாக அறிவிக்கப்பட்ட பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட அந்தச் சுற்றுலா தலத்துக்கு ஏற்ப நீக்குப்போக்கான வகையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தற்போது சுற்றுலா தலச் செயல்முறை, வருகையாளர் சேவை, சில்லறை விற்பனை மற்றும் பாதுகாவல் பிரிவுகளில் வேலை செய்யும் இந்த ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.
கரையோரப் பூந்தோட்டங்கள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு 'ஏஆர்இயு' எனும் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைத் துறை ஊழியர் சங்கம் ஆதரவளிக்கிறது.
அந்த ஊழியர் சங்கம், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்வதுடன் ஊழியர்களின் பயிற்றுவிப்பாளர்களையும் நியமிக்கும்.
கரையோரப் பூந்தோட்டங்கள் நிறுவனத்துக்கும் ஊழியர் சங்கத்துக்கும் இடையிலான செயல்முறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி யாக இந்தப் பயிற்சி ஏற்பாடு அமைகிறது.
அதற்கு அடுத்த கட்டத்தில், தற்போது வெளிப்புறத் தோட்டங்களைப் பராமரித்தல் அல்லது பசுமை வனப்பு ஆய்வு போன்ற பணிகளைச் செய்யும் 21 பசுமை வனப்பு ஊழியர்கள் பயிற்சிக்கு அனுப்பப் படுவார்கள்.
அதன் பிறகு அவர்கள் அனைவரும் பசுமை வனப்புத் துறையில் உள்ள பல்வேறு பணிகளைச் செய்ய தயாராக இருப்பார்கள்.
கரையோரப் பூந்தோட்டங்கள் வளாகத்தில் தற்போது 370 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
"கொவிட்-19 பாதிப்பு காரணமாக எங்கள் சுற்றுலா தலம் மறு உருவாகத்தில் கவனம் செலுத்தி, எங்கள் வர்த்தக மாதிரியைப் புதுப்பிக்க வேண்டும்," என்றார் கரையோரப் பூந்தோட்டங்கள் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு லீ கொக் ஃபாட்.
"இப்போது எங்கள் சுற்றுலா தலத்துக்கு வருவோர் அனைவரும் வாரயிறுதியில் வரும் சிங்கப்பூரர்கள். அவர்களுக்கான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உகந்த சேவை வழங்குவதும் இதில் அடங்கும்.
"வார நாட்கள் என்று பார்த்தால் எங்களுக்குப் புதிய தேவைகள் உண்டு. உதாரணத்துக்கு, தொலைபேசி அல்லது இணைய சேவைகள் மூவம் விசாரிப்புகளுக்குப் பதிலளித்தல். இப்படி வாரம் முழுவதுக்கும் பல்வேறு தேவைகளைக் கவனிக்கும் வகையில் ஊழியர்களைப் பணியமர்த்த அவர்களுக்கு வெவ்வேறு திறன்கள் இருக்க வேண்டும்," என்றும் திரு லீ கூறினார்.
கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த கரையோரப் பூந்தோட்டங்கள் ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து வருகையாளர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஜூலையில் 360,000 வருகையாளர்களாக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த மாதம் 600,000த் தாண்டியது.
"செயல்முறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நீண்டகாலத் திட்டத்தால் கரையோரப் பூந்தோட்டங்கள் நிறுவனத்துக்கு மட்டுமல்லாது அதன் ஊழியர்களுக்கும் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது," என்றார் நேற்று அங்கு வருகையளித்த என்டியுசியின் தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங்.

