இவ்வார இறுதியில் நடைபெறும் ஜி-20 உச்சநிலை மாநாடு, ஒரு ஆற்றல்மிக்க தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள உலக சுகாதார நிறுவனத்துக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டிருப்பதாக இரண்டாம் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சருமான திரு வோங், சிங்கப்பூரில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
ஜி-20 அமைப்பில் உலகின் மேம்பட்ட மற்றும் பெரிய பொருளியல்களைக் கொண்ட 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்கின்றன.
இம்மாதம் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மெய்நிகர் நிகழ்வாக இடம்பெறவிருக்கும் இந்த ஆண்டு உச்சநிலை மாநாட்டின் கருப்பொருள், "அனைவருக்குமான 21ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை மெய்யாக்குதல்" என்பது.
இந்த உச்சநிலை மாநாடு வெற்றி பெற தனது மூன்று விருப்பங்களை திரு வோங் முன்வைத்தார்.
"முதலாவது, உலக சுகாதார நிறுவனத்துக்கும் கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க அது எடுத்து வரும் கடும் முயற்சிகளுக்கும் உலக அளவிலான ஆதரவை ஜி-20 அமைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், உலக அளவில் தேவைப்படுவோர் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க வழி ஏற்படும்," என்றார்.
"இரண்டாவது, விதிமுறைகள் சார்ந்த பலதரப்பட்ட வர்த்தக முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் ஜி-20 அமைப்பு ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும். அதன் மூலம் சந்தைகள் திறக்கப்பட்டு, விநியோகத் தொடர் கட்டிக்காக்கப்படும். அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் கிடைக்கவும் இடையூறுகளைக் குறைக்கவும் பொருளியல் மீட்சி மேம்படவும் அதன் மூலம் சாத்தியமாகும்.
"மூன்றாவது, பசுமையான அதிக காலம் நீடிக்கக்கூடிய உலக பொருளியலை மறுநிர்மாணம் செய்ய ஜி-20 அமைப்பின் தலைவர்கள் கூட்டு உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும்," என்றும் அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
"கொவிட்-19 தடைகள் இருந்தும், கடந்த ஆண்டு டிசம்பரில் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சவூதி அரேபியா, கொள்ளைநோயை எதிர்கொள்ள அனைத்துலக ஆதரவை நாடியுள்ளது.
"மேலும் ஜி-20 அமைப்பின் உறுப்பினர் அல்லாத நாடுகளும் இந்த முயற்சிகளில் பங்களிக்க அது கேட்டுக்கொண்டுள்ளது," என்றும் திரு வோங் விவரித்தார்.
ஜி-20 அமைப்பில் சிங்கப்பூர் ஓர் உறுப்பு நாடாக இல்லாதபோதும், உலகளாவிய ஆளுமைக் குழுவின் (3ஜி) ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அது ஜி-20 அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது.
3-ஜி அமைப்பில் புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம், பஹ்ரேன், கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து உட்பட 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
"சவூதி அரேபியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பு ஒரு வலுவான, சரிசமமான பொருளியல் மீட்சிக்கு வழிகாட்டும்," என்றும் திரு வோங் தெரிவித்தார்.

