தந்தை: மகளைப் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தவில்லை என 15 குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு

தந்தை: மகளைப் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தவில்லை என 15 குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு

2 mins read
33fb5bc4-d9f7-44dc-a177-ad1c322a8b18
-

தமது மகளைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தவில்லை என்றும் தமக்கு எதிராக பதிவாகியுள்ள 15 குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கப் போவதாகவும் ஆடவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக தமது மகளைப் பலமுறை பாலியல் ரீதியாக அந்த 45 வயது ஆடவர் கொடுமைப்படுத்தியதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

2010ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை அந்தப் பெண் 10லிருந்து 14 வயதாக இருந்தபோது அவரை அந்த ஆடவர் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக 14 குற்றச்சாட்டுகளும் மானத்துக்குக் களங்கம் விளைவித்தது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டும் அந்த ஆடவர் மீது பதிவாகியுள்ளது.

தாம் கைது செய்யப்பட்ட பிறகு 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தம்மிடமிருந்து போலிசாரால் பெறப்பட்ட நான்கு வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தமக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த ஆடவரின் மகனே, அவருக்கு எதிராக சாட்சியம் அளிப்பார் எனக் கூறப்படுகிறது.

தந்தையின் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் இரு முறை அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி தாயிடம் தஞ்சம் புகுந்ததாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளியே சொல்லக்கூடாது என பலவாறாக அந்த ஆடவர் மகளை மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

சிறுமியின் தாயார், அந்த ஆடவரிடமிருந்து மண விலக்கு பெற்று வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தாயிடம் தஞ்சம் புகுந்த அந்தச் சிறுமி, தாயின் தற்போதைய கணவரிடமும் தாயாரிடமும் துன்புறுத்தல்கள் பற்றித் தெரிவித்த பிறகு இந்த குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு தற்போது 20 வயது. அவரது அடையாளத்தைக் காக்க குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்