சிங்கப்பூரில் எட்டாவது நாளாக இன்று சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு பதிவாகவில்லை. புதிதாக இன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஐவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
அவர்கள் அனைவரும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 58,130 ஆகி உள்ளது.
நேற்று கிருமித்தொற்று கண்டறியப்பட்ட ஆறு பேரில் ஒருவரான 55 வயது ஆடவர் இந்தியாவிலிருந்து வந்தவர். மூவர் வேலை அனுமதி அட்டையில் இருப்பவர்கள். இருவர் பிலிப்பீன்சிலிருந்தும் மற்றொருவர் மியன்மாரிலிருந்தும் வந்தவர்கள். சிங்கப்பூரில் பணிபுரியும் இம்மூவருக்கும் சோதனையின்போது எந்த அறிகுறியும் தென்படவில்லை.
மேலும் இருவரில் ஒருவர், சார்ந்திருப்போர் விசாவில் இருப்பவர். அவர் பிரிட்டனிலிருந்து வந்தவர். மற்றவர் நீண்ட கால தங்கும் அனுமதி பெற்றவர். பிலிப்பீன்சிலிருந்து அவர் வந்திருந்தார்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் அறுவர் குணமடைந்து, நேற்று வசிப்பிடம் திரும்பினர்.
இதுவரையில் மொத்தம் 58,024 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டனர். 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை. சமூகத் தனிமைப்படுத்தும் வசிப்பிடங்களில் 26 பேர் பராமரிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் மாநிலத்தில் பரவிய கிருமித் தொற்றால் சிங்கப்பூரில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமி தொற்றிய 15 பேர் வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.
உலக அளவில் 1.33 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழிந்துள்ளனர். 55.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

