முதலாளியின் சித்திரவதைக்கு மீண்டும் மீண்டும் ஆளாகிய இந்தோனீசியப் பணிப்பெண் ஒருவர், அதற்கு ஒரு முடிவு கட்ட 15 மாடி உயரத்திலிருந்து பால்கனி வழியாகவே இறங்கித் தப்பித்தார். இவ்வாறு கொடுமை இழைத்த முதலாளிக்கு இன்று 10 மாதம், இரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நூர் ஓடாடி யூசோஃப், தன் 24 வயதுப் பணிப்பெண் திருவாட்டி சூலிஸ் செட்யோவாத்தியின் கன்னத்தில் அறைவது, முடியைப் பிடித்து இழுப்பது எனத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் திருவாட்டி சூலிஸ் பலமுறை இவ்வாறு தாக்கப்பட்டார். கொடுமையிலிருந்து தப்பிக்க திருவாட்டி சூலிஸ் தம் உயிரையே பணயம் வைத்துவிட்டதைத் தண்டனை விதிப்பின்போது நீதிபதி குறிப்பிட்டார்.
இத்தகைய கொடுஞ்செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை மற்றவர்களும் உணரவேண்டும் என்பதற்காக இத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு திருவாட்டி சூலிசிடம் $7,000ஐ இழப்பீட்டுத் தொகையாக நூர் கொடுத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றங்களைப் புரிந்த காலகட்டத்தில் 31 வயது சிங்கப்பூரரான நூர், சிங்டெல் ஊழியராக இருந்தார் என்றும் ஆதரவு வழங்குவதற்காக அவர் மனிதவள அமைச்சின் தொடர்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நூரின் வீட்டில் திருவாட்டி சூலிஸ் வேலை செய்யத் தொடங்கினார்.
ஒருமுறை தம் மகளின் வயிற்றில் மருந்து இட மறந்ததால் திருவாட்டி சூலிஸ் மீது நூர் எச்சில் உமிழ்ந்ததுடன் அவரை இரண்டு முறை அறைந்தார். சித்திரவதை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்த நிலையில், தாம் வேறு வீட்டுக்கு மாற விரும்புவதாக திருவாட்டி சூலிஸ் கூறினார். இனிமேல் அவரை அடிக்கப்போவதில்லை என்று நூர் உறுதியளித்தார்.
இருப்பினும், தன் பிள்ளைகளின் படங்கள் திருவாட்டி சூலிசின் கைபேசியில் இருந்ததையும் அப்படங்களை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததையும் அறிந்த நூர், திருவாட்டி சூலிசைத் தாக்கினார். கைபேசியை வைத்துக்கொண்டதுடன் தொடர்ந்து ஒரு வாரத்திற்குத் தினமும் பணிப்பெண்ணை நூர் தாக்கியதாகக் கூறப்பட்டது.
கைபேசியை எப்படியோ திருவாட்டி சூலிஸ் எடுத்துக்கொண்டதை அறிந்த நூர், சீப்பைக் கொண்டு அவரின் நெற்றியைக் குத்திக் காயப்படுத்தினார். அத்துடன் அறைந்து முடியையும் பிடித்து இழுத்தார். தலையை உதைத்தார், 'விலைமாது' என்று அழைத்தார், துடைப்பத்தைக் கொண்டு தலையிலும் முதுகிலும் அடித்தார்.
இப்படியே பலமுறை திருவாட்டி சூலிசுக்கு நூர் கொடுமை இழைத்து வந்ததை அடுத்து, திருவாட்டி சூலிஸ் அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முடிவெடுத்தார்.
வீட்டுக் கதவு பூட்டப்பட்ட நிலையில், பின்னிரவு இரண்டு மணியளவில் 15வது மாடியிலிருந்து திருவாட்டி சூலிஸ் ஒவ்வொரு மாடியாகக் கீழே இறங்கினார். பின்னர் தமது முகவரின் ஆலோசனைப்படி போலிசாரிடம் புகாரும் அளித்தார் அவர்.

