லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அனுப்பும் ஆவணங்கள் என்று கூறி வலம்வரும் வாட்ஸ்அப் செய்திகள் பொய் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பான குற்றச் செயல்கள் புரிந்திருப்பதன் சந்தேகத்தில் தனிநபர்கள், நிறுவனங்கள், மூன்றாம் தரப்பினர் ஆகியோரது வங்கிக் கணக்குகள் இன்னும் 24 மணி நேரத்தில் முடக்கப்படும் என்று குறிப்பிடும் ஆவணங்களைப் பொதுமக்களில் சிலர் வாட்ஸ்அப் வழி பெற்று வருகின்றனர்.
இதைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது குறித்து அறிந்திருப்பதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் இந்த போலி ஆவணங்களில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் சின்னமும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓர் அதிகாரியின் கையெழுத்தும் இடம்பெறலாம் என்றும் கூறப்பட்டது.
அனுப்பப்பட்ட ஆவணங்கள் உண்மையானவையா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆவணங்களில் இருக்கும் சொல் அல்லது இலக்கணப் பிழைகளைக் கவனிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற ஆவணங்களைப் பெறும் சிங்கப்பூரர்கள் எடுக்கக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த 1800-376-0000 என்ற லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் தொடர்பு எண்ணில் உதவி நாடலாம்.
- ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது போல் எந்த ஒரு பரிவர்த்தனைக்காகவும் பணத்தை அனுப்பவோ மாற்றிவிடவோ வேண்டாம்.
- அனுப்புநரிடம் தனிப்பட்ட தகவல்களையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் தர வேண்டாம்.
மோசடி அல்லது விரும்பத்தகாத நோக்கத்தோடு அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்வது கடுமையாகக் கையாளப்படும் என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடந்து வருவதாகப் புலனாய்வுப் பிரிவு பேச்சாளர் ஒருவர் கூறினார்.

