இந்தியாவில் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள டிபிஎஸ் குழுமம் உத்தேசித்து இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் டிபிஎஸ் வங்கியின் செயல்திறன் அந்த வங்கியின் விருப்பம்போல விரிவடையும். ஆனால் இரண்டு வங்கிகளுக்கும் இடையிலான கலாசாரங்களில் மலையையும் மடுவையும் போன்ற வேறுபாடுகள் இருப்பதால் இவற்றைச் சமாளிப்பது டிபிஎஸ் வங்கிக்குப் பெரும் சவாலாகவே இருக்கும்.
வாராக்கடன், நிர்வாகப் பிரச்சினைகள், மூலதனத்தைத் திரட்ட முடியாத நிலைமை ஆகியவற்றை எதிர்நோக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கி, இந்தியாவின் மத்திய வங்கி உத்தேசித்துள்ள ஒரு திட்டத்தின்கீழ், டிபிஎஸ் குழுமத்தின் இந்திய துணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வரவிருக்கிறது.
இந்திய வங்கித் தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டம் பற்றி சந்தேகம் எழுப்பி இருக்கின்றன. இந்தியாவில் சுமார் அரை மில்லியன் வங்கி ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்த வங்கிகள் இணைப்பை ஆட்சேபித்து இருக்கிறது.
இந்தத் திட்டம் கைகூடி வரும்போது இந்தியாவிலேயே பெரும்பாலும் மின்னிலக்கமயத்தில் செயல்படுகின்ற, நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்ட ஒரு வங்கியாக டிபிஎஸ் விரிவடையும்.
இருந்தாலும் லட்சுமி விலாஸ் வங்கியின் 4,000க்கும் அதிக ஊழியர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் டிபிஎஸ் சவால்களை எதிர்நோக்கும் என்று பலரும் தெரிவிக்கிறார்கள்.
"ஊழியர்களின் செயல்முறை வழக்கங்களைப் பார்க்கையில் இரு வங்கிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு.
"டிபிஎஸ் ஊழியர்கள் மின்னி லக்கத் தேர்ச்சி பெற்றவர்கள். பன்னாட்டு வங்கி ஒன்றில் வலுவான காப்புறுதி நடைமுறைகளில் அவர்கள் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள். அதேவேளையில், லட்சுமி விலாஸ் ஊழியர்களோ வாடிக்கையாளர்களிடம் ஒருமித்த கவனம் செலுத்தி பழைய முறைப்படி வேலை பார்ப்பவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
"தோற்றத்தில்கூட இரண்டு வங்கிகளின் அலுவலகங்கள் வேறுபட்டு இருக்கும். புதுயுக வங்கியில் வேலை பார்த்திராத ஊழியர்களை ஒன்று சேர்த்துக்கொண்டு செயல்படுவது என்பது சவாலாகத்தான் இருக்கும்," என்று அவெஞ்சர்ஸ் பார்ட்னர்ஸ் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கட் ஐயர் என்பவர் கூறினார்.
கலாசார வேறுபாடுகளுக்கு அப்பாலும் இதர பிரச்சினைகளும் உள்ளதாக மெக்காரி என்ற நிறுவனத்தில் பகுப்பாய்வாளராகப் பணியாற்றும் சுரேஷ் கணபதி என்பவர் கூறினார்.

