எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டம் (SGUnited Traineeships Programme) எனும் வேலை இணைப்புடன் கூடிய பயிற்சித் திட்டத்தில் பங்கேற்போருக்கு மசேநிதி பங்களிப்பு உண்டா? இந்தப் பயிற்சித்திட்டத்தில் பங்கேற்போருக்கு முழு நேர வேலைக்கான சம்பளம் கொடுக்கப்படுகிறதா அல்லது பயிற்சி ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறதா?
எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டம் முழு நேர வேலைக்குப் பதில், புதிய பட்டதாரிக்கு தொழில்துறை சார்ந்த திறன்களையும் அனுபவங்களையும் பெற வாய்ப்பு களை வழங்குகிறது.
இப்பயிற்சித் திட்டம் 9 மாதங்கள் வரை நீடிக்கலாம். பட்டதாரியின் கல்வித் தகுதி, பயிற்சியில் எத்தகைய பணியில் ஈடுபடுவார் என்பதைப் பொறுத்து, பயிற்சி ஊக்கத் தொகையாக மாதத்திற்கு $1,100 முதல் $2,500 வரை வழங்கப்படும். இது ஒரு பயிற்சித் திட்டம் என்பதால், ஊக்கத் தொகையிலிருந்து மசேநிதி பங்களிப்பு கிடையாது. பயிற்சி பெறுபவருக்கு முழு நேர வேலைப் பயிற்சியின்போதோ அல்லது பயிற்சி முடிந்த பிறகோ வேலை வழங்கப்படலாம். இது பயிற்சி பெறுபவர், பணியில் எவ்வாறு செயல்படுகிறார் மற்றும் அந்நேரத்தில் நிறுவனத்தில் ஆள்சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதைப் பொறுத்தது.
இத்திட்டம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.sgunitedtraineeships.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.
ஓர் இளம் பட்டதாரியாக, ஒன்றரை ஆண்டு முழுநேர வேலை அனுபவம் எனக்கு இருந்து, வேலை மாற முடிவெடுத்து, எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பித்தால், அது பரிசீலிக்கப்படுமா? உச்ச வயது வரம்பு அல்லது அனுபவம் இத்திட்டத்தில் கருத்தில் கொள்ளப்படுகின்றதா?
தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகம், தனியார் கல்வி நிலையம் ஆகியவற்றிலிருந்து 2019 அல்லது 2020ஆம் ஆண்டில் கல்விச் சான்றிதழ் களைப் பெற்ற உள்ளூர் மாணவர்களும் அதே காலகட்டத்தில் தேசிய சேவையை முடித்த சேவையாளர்களும் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவர். இவ்விரு ஆண்டுகளில் நீங்கள் பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது தேசிய சேவையை முடித்திருந்தாலோ உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
உங்களின் தற்போதைய நிலவரப்படி, எஸ்ஜி ஒற்றுமை பணியிடைக்கால வேலைத் திட்டத்தை (SGUnited Mid-Career Pathways Programme) நீங்கள் பரிசீலிக்கலாம். ஒரு நிறுவனத்துடன் இணைந்து, தொழில்துறைக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி ஊக்கத் தொகையாக $1,400 முதல் $3,000 வரை வழங்கப்படுகின்றது.
வாழ்க்கைத் தொழில் தேவைகள் குறித்த சந்தேகங்களையும் வேலைத் தேடல் தொடர்பான உதவிக்கும் WSG's Careers Connect என்ற வாழ்க்கைத் தொழில் இணைப்பு களில் தொடர்புகொள்ளலாம். எங்களின் அதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுவார்கள்.
எஸ்ஜி ஒற்றுமை மெய்நிகர் வாழ்க்கைத்தொழில் வேலைச் சந்தையில் (SGUnited Jobs Virtual Career Fair) நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (PMETs) ஆகியோருக்கான வேலை வாய்ப்புகள் உள்ளதா? இதுவரை நான் பார்த்த சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு வேலைச் சந்தைகளில் பொது நிலை ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. வளாகத்தில் நடத்தப்படும் வேலைச் சந்தைக்கும் மெய்நிகர் வேலைச் சந்தைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? வேலைக்கு அமர்த்தக்கூடிய முதலாளிகளிடம் மெய்நிகர் வேலைச் சந்தையில் கேள்விகள் கேட்கலாமா?
ஆம் நிச்சயமாக! மெய்நிகர் வாழ்க்கைத்தொழில் சந்தைகளில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (PMET) ஆகியோருக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. பொறியியல், சுகாதாரப் பராமரிப்பு, நிதி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற துறைகள் சார்ந்த அல்லது தற்போது இருக்கும் வேலைகள் தொடர்பில் இந்த மெய்நிகர் வேலைச் சந்தைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஒவ்வொன்றும் சுமார் இரு வாரங்களுக்கு நீடிக்கும்.
மெய்நிகர் வாழ்க்கைத்தொழில் சந்தைகளின் தனிச்சிறப்பு என்னவென்றால், நீங்கள் எங்கும் பயணிக்காமல் உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இடத்திலும் இணையத்தில் வேலை வாய்ப்புகளைத் தேடலாம். அடுத்து வரும் மெய்நிகர் வாழ்க்கைத்தொழில் சந்தைகள் பற்றிய மேல் விவரங்களுக்கு www.sgunitedjobs.gov.sg எனும் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.
எனக்கு வயது 26, சமீபத்தில் பட்டம் பெற்று தற்போது ஒரு குழப்பமான சூழ்நிலையில் உள்ளேன். கல்விக்கு எடுத்த கடன் தொகையைச் செலுத்துவதற்கான காலம் தொடங்கிவிட்டது. நான் படித்த துறைக்கு சம்பந்தம் இல்லாத முழு நேர வேலை வாய்ப்பு வந்துள்ளது. அதே சமயம், எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டத்தின் (SGUnited Traineeships Programme) கீழ், எனக்குப் பிடித்த சில நல்ல பயிற்சி வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அதிலிருந்து கிடைக்கும் பயிற்சி ஊக்கத் தொகை என் குடும்பத்திற்கும் எனக்கும் போதுமானதாக இருக்காது என்ற ஐயம் உள்ளது. அடுத்து என்ன செய்வது?
நீங்கள் உங்களின் தனிப்பட்ட பொருளாதார சூழ்நிலையையும் தற்போதைய வேலைச் சந்தை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நன்கு ஆராய வேண்டும். ஏனெனில், நீங்கள் எடுக்கும் முடிவு உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி, எல்லோருக்கும் விரும்பியதை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உடனடியாக கிடைத்துவிடுவதில்லை. சிலர் திட்டமிட்டு தங்களுக்கு விருப்பமான வேலையைப் பெற கூடுதல் காலம் எடுத்துக்கொள்வர்.
ஒவ்வொரு முறையும் வேலை மாறும்போது, புதிய திறன்களை அல்லது இருக்கும் திறன்களை மேம்படுத்தியவாறு தங்களது விருப்பமான வேலைக்கு விண்ணப்பித்து அதை வெற்றிகரமாக பெறுகின்றனர்.
உங்கள் நிலைமையைப் பற்றி யாரிடமேனும் பேச விரும்பி னால், கெரியர்ஸ் கொனெக்ட் (Careers Connect) இடங்களுக்கு வருகை புரிந்து எங்களின் அதிகாரிகளிடம் உரையாடி, ஆலோசனை பெறுங்கள். கெரியர்ஸ் கொனெக்ட் இணையத்தளம்: www.mycareersfuture.gov.sg/careercoaching
வேலை வாய்ப்பு தொடர்பில் ஏதாவது கேள்விகள் உள்ளனவா?
வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம் (PCP) போன்ற நடுத்தர வயதினருக்கு உதவும் திட்டங்களைப் பற்றி மேலும் அறிய ஆவலா?
'முரசிடம் கேளுங்கள்' என்ற இக்கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைக.
உங்கள் ஐயங்களைத் தீர்க்க, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளிக்கும்.
கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்.
கூடிய விரைவில் பதில்களுடன் உங்களை சந்திக்கிறோம்!
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் திட்டங்களைப் பற்றி அறிய, இந்த 'QR' குறியீட்டை திறன்பேசி வழி 'ஸ்கேன்' செய்யவும்.

