ஜூரோங் கேட்வே ரோட்டில் புளோக் 135ல் அமைந்துள்ள 'ஓடி கிரடிட்' எனும் கடன் வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனத்தில் நேற்று ஆயுதங்களுடன் நுழைந்த நால்வர் $48,000ஐ கொள்ளையிட்டுச் சென்றனர்.
முகக்கவசம் தவிர முகத்தை மறைக்க வேறு எதையும் பயன்படுத்தவில்லை அம்மூவரும்; கையுறைகள்கூட அணியவில்லை என்று அந்தக் கடையில் பணியில் இருந்த திருவாட்டி யாங் குறிப்பிட்டார்.
கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் 19 முதல் 26 வயதுக்குட்பட்ட நால்வர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் மூவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
அவர்களில் இருவர் நேற்று கடைக்கு வந்து நோட்டம்விட்டுச் சென்றதாக திருவாட்டி யாங் தெரிவித்தார்.
பின்னர் நேற்று மாலை 4 மணிவாக்கில் கடைக்குள் நுழைந்த மூவரில் ஒருவர் திருவாட்டி யாங்கிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் யாங்கின் முடியைப் பிடித்து இழுத்து பணத்தைக் கொடுக்கும்படி வற்புறுத்தினார்.
அந்த சமயத்தில் மற்ற இருவரும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டனர்.
பின்னர், திருவாட்டி யாங்கை ஓர் அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் சென்றுவிட்டனர்.
மிரட்டலுக்குப் பயன்படுத்திய கத்தியை அப்புறப்படுத்த கைதானவர்களில் நான்காவது நபர் உதவியதாகக் கூறப்பட்டது.
இரண்டு முதல் 6 வயது வரையிலான 3 பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி யாங், கொள்ளையன் கத்தியைக் காட்டியதும், தம் பிள்ளைகளைத்தான் நினைத்துக்கொண்டாராம். பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து மீட்கப்பட்டபோது திருவாட்டி யாங், அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் இருந்ததாக பக்கத்து கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நிகழ்ந்த 12 மணி நேரத்துக்குள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து $30,000 ரொக்கம் மீட்கப்பட்டது, எஞ்சிய பணத்தைத் திரும்பப்பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நால்வர் மீதும் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று கூறப்பட்டது.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை, குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

