நிறுவனங்களிலும் சமூகத்திலும் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க இளையர்கள் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என்று சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது.
இதற்காக 'எகோ-பிசினஸி'ன் லாபநோக்கற்ற பிரிவான 'ஈபி இம்பாக்ட்' ஒரு ஒரு வழிகாட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பசுமைத் துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், சிறு இளையர் குழுக்கள் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 63 இளையர்களும் 53 வழிகாட்டிகளும் பதிவு செய்துள்ள இந்த திட்டம் நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. உரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோருடன் மாணவர்கள், பருவநிலை ஆர்வலர்கள் மற்றும் தெமாசெக் ஃபேஸ்புக், எஸ்பி குழுமத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
'நீடித்த நிலைத்தன்மை பரிமாற்றம்' (சஸ்டைனபிலிட்டி எக்ஸ்சேஞ்ச்) என்று அழைக்கப்படும் இந்த வழிகாட்டல் திட்டம் நேற்று 'ஈபி இம்பாக்ட்' இணையத்தளத்தில் இரண்டாவது சுற்று விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது. விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய இறுதிநாள் டிசம்பர் 11. 19 முதல் 30 வயதிற்குட்பட்ட இளையர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் நீடித்த நிலைத்தன்மை பிரச்சினைகள் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவேண்டும். அத்துடன், பசுமைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். வழிகாட்டி களாகப் பதிவுசெய்வோர், பசுமைப் பாதுகாப்பு தொடர்பான துறையில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வழிகாட்டியும் மூன்று முதல் நான்கு இளையர்களுக்கு, அவர்களது ஆர்வத்தின் அடிப்படையில் வழிகாட்டுவார்கள். இந்த மூன்று மாத கால திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடையும்.
நிகழ்ச்சியின் முடிவில், இளையர்கள் தங்கள் தீர்வுகளை விளக்கும் எழுத்துபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். குழுக்கள் சமர்ப்பித்த திட்டங்களின் வெற்றி, செயல்திறன் குறித்து அடுத்த ஆண்டு செப்டம்பரிலும், 2022ஆம் ஆண்டிலும் 'ஈபி இம்பாக்ட்' அவர்களுடன் பேசும்.
இந்த கலந்துரையாடலில் இளையர்கள் ஆராயக்கூடும் என தாம் நம்பும் நான்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை டாக்டர் ஏமி கோர் முன்வைத்தார்.
முதலாவது, வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில், செமகாவ் நிலமீட்புக்கு மூன்றில் ஒரு பங்கு குறைவான கழிவுகளை அனுப்பும் நாட்டின் இலக்கை மேம்படுத்துவதற்கான கழிவே இல்லாமல் செய்யும் உத்தி. கழிவுகளை பயனுள்ள பொருளாக மாற்றுவதில் அதிக ஆராய்ச்சி, தொழில்நுட்பங்கள். பருவநிலை அறிவியல், கடல்மட்ட உயர்வைத் தடுக்க கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கான பல வழிகள்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை அறிந்துகொள்வதுடன், இளையர்கள் "கொள்கைகள், வர்த்தகத் தீர்வுகளில் நீடித்த நிலைத்தன்மையை இணைத்துக்கொள்ளும்போது பெரும்பாலும் எதிர்ப்படும் சிக்கல்கள், பரிசீலனைகள், வர்த்தக பரிமாற்றங்கள்" ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் கோர் வலியுறுத்தினார்.
"இது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாட்டை திறம்பட தலைமை தாங்க உதவும்," என்றார் அவர். சுற்றுச்சூழல் அழிவு பற்றி பெருங்கவலை இளையர்களிடையே வளர்ந்து வருகிறது என்பதையும் டாக்டர் கோர் சுட்டினார். ஆனால் அந்த கவலைகளை செயலாக மாற்றுவதற்கான வாய்ப்புகளும் வாழ்க்கைப் பாதைகளும் உள்ளன என்றார் அவர்.

