அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண், உணவுத் துறையில் பல புதிய வேலைகள் உருவாக்கப்படவுள்ள நிலையில், செயல்முறை கட்டுப்பாடு, தானியக்கம், இயந்திரவியல் போன்றவற்றில் நிபுணத்துவம் உடைய பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
தேசிய பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நீடித்த நிலைத்தன்மைக்கு எதிர்காலத்தில் பொறியியல் தீர்வுகள் தேவைப்படுவதாகக் கூறினார்.
"வெள்ளத் தடுப்பு அரண்களை அமைப்பது, அதிக திறன் கொண்ட சூரிய ஒளித் தகடுகளை உருவாக்குவது, மின்சார வாகனங்களை மின்னூட்டம் செய்யும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்றவற்றை செய்ய பொறியியல் தீர்வுகளை நாம் நாடுகிறோம்," என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சி இணையம் வழியாக நடைபெற்றது. புக்கிட் திங்கி ரோட்டில் உள்ள சிங்கப்பூர் பொறியாளர்கள் கழக வளாகத்தில் திருவாட்டி ஃபூ உரையாற்றினார்.
இளையர்களிடையே பொறியியல் துறை மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த வருடாந்திர நிகழ்ச்சி, இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கியது. இவ்வாண்டிற்கான 'பொறியியல் புத்தாக்க சவால்' போட்டியின் வெற்றியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். நிஜ உலகில் பல்வேறு விவகாரங்களுக்குப் பொறியியல் தீர்வுகளைக் கண்டுபிடிக்க 101 மாணவர் குழுக்கள் போட்டியிட்டன.
போட்டியின் வெற்றியாளர்களுக்கு தங்களது திட்டப்பணிகளை ஆரம்பிக்க, தொடக்க நிதி வழங்கப்படும்.
"நமது ஊட்டச்சத்து தேவையில் நாம் தற்போது 10 விழுக்காட்டிற்கும் குறைவாக தயாரிப்பதால், உள்ளூர் உணவு உற்பத்தியைத் துரிதப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மேலும் அவசியமாகிறது," என்று அமைச்சர் ஃபூ தமது உரையில் கூறினார்.
பொறியியல் துறையில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்துவது குறித்து மூன்று உடன்பாடுகள் நிகழ்ச்சியில் கையெழுத்தாகின. அவற்றில் இரு உடன்பாடுகள், சிங்கப்பூரின் முதல் செயற்கை நுண்ணறிவு பொறியியல் மையத்தை அமைப்பதில் கவனம் செலுத்தும். மேலும், பொறியாளர்களுக்கான கற்றல், மேம்பாட்டுத் திட்டங்களை அமைப்பதற்கும் அவ்விரு உடன்பாடுகள் பங்களிக்கும்.
ஏஐ சிங்கப்பூர், எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான மூன்றாவது உடன்பாடு, பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் கவனம் செலுத்தும்.

