சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், தன்னுடைய வருடாந்திர 'மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்' விழா என்ற செயல் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் 3,500 வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்வி உதவிப் பொருட்களை வழங்கியது.
புதிய கல்வி ஆண்டில் நன்கு படித்துத் தேர்ச்சி பெற மாணவர்களை ஊக்குவிக்கவும் புதிய கல்வி ஆண்டுக்குத் தயாராகும் வசதி குறைந்த குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் குறைந்த வருவாய் குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்குக் கல்வி ஓர் எட்டாக் கனியாகிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் ஆண்டுதோறும் சிண்டா இந்த உதவியை வழங்கி வருகிறது.
தனிநபர் வருமானம் $1,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இந்தத் திட்டம் மூலம் பற்றுச்சீட்டுகளைப் பெற தகுதி பெறுகின்றனர்.
ஒவ்வொரு மாணவருக்கும் எழுதுபொருட்கள், புத்தகங்கள் வாங்க $120 பற்றுச்சீட்டும், காலணிகள் வாங்க $60 பற்றுச்சீட்டும் வழங்கப்படுகிறது.
இப்போதைய கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 'மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்' விழா நவம்பர் 30 வரை 11 நாட்கள் நடக்கும்.
இந்த 11 நாட்களில் குடும்பங்கள் குறிப்பிட்ட நாட்களில் வந்து பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
கொவிட்-19 கிருமி பரவலால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ சிண்டா $7 மில்லியன் நிதியை ஒதுக்கியிருந்தது. இதனை தவிர்த்து இப்போது இந்த 'மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்' திட்டத்திற்காக கூடுதலாக $630,000 ஒதுக்கியுள்ளது.
கல்வி பெரும் மாணவர்களின் நலனுக்காக பல திட்டங்களை சிண்டா முன்வைத்து வருகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வசதிகுறைந்த குடும்பங்களிலிருந்து வந்த 300 மாணவர்களுக்குக் கணினி வழங்கி அவர்களின் கல்விப் பயணத்தை மேம்படுத்தியிருக்கிறது.
1,000 தொடக்கநிலை, உயர் நிலை, உயர் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு $400,000 நிதியுதவி வழங்கிவருகிறது.
இதனிடையே, பற்றுச்சீட்டு பெற்றவர்களில் ஒருவரான திருமதி செந்தாமரை வி சுப்பிரமணியன் என்ற மாது, சிண்டா அளிக்கும் இப்பற்றுச்சீட்டுகள் ஒவ்வோர் ஆண்டும் தமது நான்கு பிள்ளைகளுக்கும் பள்ளி துவங்கும்போது நிறைய புத்தகங்களையும் தேவையான அத்தியாவசிய பொருட்களை யும் வாங்க உதவியாக இருக்கிறது என்றார்.
தன்னையும் தன்னுடைய இரண்டு தம்பிகள், ஒரு தங்கையையும் கவனித்து வரும் அம்மாவிற்கு நிதியளவில் அதிக சுமையைத் தரக்கூடாது என்ற எண்ணத்துடன் ரோவன் ரிஷி, 21, என்ற மாணவர் கடந்த சில ஆண்டுகளாக படித்துக்கொண்டே பகுதி நேர வேலைகளைப் பார்த்து வருகிறார்.
ரோவன் ரிஷி, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான கற்றல் துறையில் பட்டயப் படிப்பு படித்து வருகிறார்.
இவர், தமக்கும் தனது சகோதரர்களுக்கும் பள்ளிக்குத் தேவையான புத்தகங்களையும் காலணிகளையும் வாங்குவதற்கான பற்றுச்சீட்டுகளை நேற்றுக் காலை சிண்டா தலைமையகத்திற்குச் சென்று பெற்றுக்கொண்டார்.

