இறந்த மாதின் குடும்பத்துக்கு $5.6 மில்லியன் இழப்பீடு

இறந்த மாதின் குடும்பத்துக்கு $5.6 மில்லியன் இழப்பீடு

2 mins read
0d6deab4-e54c-4b00-9133-9cf0ad861367
இழப்பீட்டுத் தொகையை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எட்வர்ட் ஃபூ கொடுக்க வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மருத்துவரின் கவனக்குறைவால் இறந்த மாதின் குடும்பத்துக்கு உயர் நீதிமன்றம் $5.6 மில்லியன் இழப்பீடு வழங்கியுள்ளது.

மரணம் அடைந்த 44 வயது திருவாட்டி மேன்டி யோங் சோக் மன்னின் குடும்பத்துக்கு இந்தத் தொகையை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எட்வர்ட் ஃபூ கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டாக்டர் ஃபூ தகுதி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் என்றபோதிலும், 'லைப்போசக்‌ஷன்' எனப்படும் கொழுப்பு அகற்றும் சிகிச்சை செய்வதில் போதுமான பயிற்சியை அவர் பெறவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இருப்பினும், திருவாட்டி யோங்கிற்கு அந்த சிகிச்சையை அவர் செய்ததாகவும் 'லைப்போசக்‌ஷன்' சிகிச்சையில் பயிற்சி பெற்ற மருத்து வருக்கு நிகரான முறையில் அவர் அதைச் செய்யவில்லை என்றும் நீதிபதி கூறினார்.

தமது மருந்தகத்தில் திருவாட்டி யோங் மயங்கி விழுந்ததும் ஆம்பு லன்ஸை டாக்டர் ஃபூ உடனடியாக அழைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் விபத்து, அவசரநிலைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் திருவாட்டி யோங்கை சுயநினைவுக்குக் கொண்டு வரத் தவறியதாக டாக்டர் ஃபூ முதலில் வழக்கைத் திசை திருப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டை பாதி வழியில் அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சார்ந்திருப்போருக்கான இழப்பீட்டின் அடிப்படையில் திருவாட்டி யோங்கின் குடும்பத்துக்கு $1.7 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

திருவாட்டி யோங்கின் கணவரான திரு சீத்தோ வெய் மிங்கிற்கு $1.4 மில்லியன், மூத்த மகனுக்கு ஏறத்தாழ $97,000, இளைய மகனுக்கு ஏறத்தாழ $122,000, முதிய பெற்றோருக்கு $94,000 வழங்கப்பட்டுள்ளது.

திருவாட்டி யோங் வழியாக அவரது குடும்பத்துக்கு கிடைக்க இருந்த வருமானம், சொத்து ஆகியவற்றின் ஆடிப்படையில் அவரது குடும்பத்துக்கு $3.8 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

திருவாட்டி யோங் 'ரோஷே டயெக்னோஸ்டிக்ஸ் ஆசிய பசிபிக்'கில் வட்டாரச் சந்தை மேம்பாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர்.

குறிப்புச் சொற்கள்